தஞ்சாவூர்: அரசியலில் கற்றுக் கொள்ள வேண்டிய கத்துக்குட்டி ஒரு மூத்த தலைவரை பார்த்து அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்று சொல்வது அவர் இன்னும் அரசியல் பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே காட்டுகிறது என்று தவெக தலைவர் விஜய்யை அமைச்சர் கோவி.செழியன் விமர்சனம் செய்தார். எதற்காக தெரியுங்களா?

தவெக செயற்குழு கூட்டத்தில் பரந்தூர் பிரச்னை குறித்து விஜய் பேசியதற்குதான் இமயமலை, எவரெஸ்ட் மீது குற்றம் சொல்வதற்கு குறைந்தபட்சம் உயரம் இருக்க வேண்டும். இல்லாத நிலையில் அரசியலில் கத்துக்குட்டியாக உள்ளவர் ஒரு மூத்த தலைவர் இப்படி செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டும் என சொல்வது அவர் இன்னும் அரசியல் பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் தான் உணர்கிறோம் என அமைச்சர் கோவி.செழியன் நச் பதில் கொடுத்தார்.

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட 10 வது வார்டு பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தின் உறுப்பினர் சேர்க்கை குறித்து அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு செய்தார். ஒவ்வொரு வீடாக சென்று திமுகவின் சாதனைகளை விளக்கி கூறினார். உறுப்பினர்கள் சேர்க்கையை ஆய்வும் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 75 ஆண்டு கால வரலாற்றை தாண்டி 76 ஆம் ஆண்டை தொட்டுள்ள திமுகவின் தலைவராக இருக்கக்கூடிய தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த நாட்டின் மீது மொழியின் மீது மக்கள் நலன் மீது காட்டுகின்ற அக்கறையை நாடறியும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு அரசியலை துவக்கி தேர்தல் களம் வந்த போதெல்லாம் அதில் போட்டியிடாமல் விலகி நின்று பாராளுமன்றம், உள்ளாட்சித் தேர்தல் இவற்றையெல்லாம் தவிர்த்து நேரடியாக முதலமைச்சர் நாற்காலி தான் எண்ணம் என்று இருக்கக்கூடிய ஒரு தலைவர் பரந்தூர் பிரச்சனைக்கு முதல்வர் ஏன் வரவில்லை என்று கேள்வி கேட்கிறார். அவர் கடந்த முறை பரந்தூர் சென்றபோது கேரவன் வாகனத்திலேயே அமர்ந்திருந்தார் இறங்கவில்லை என்பதெல்லாம் மக்கள் சொல்லும் குற்றச்சாட்டு. ஊடகத்தில் வந்த செய்தி.

எனவே இமயமலை எவரெஸ்ட் மீது குற்றம் சொல்வதற்கு குறைந்தபட்சம் உயரம் இருக்க வேண்டும் இல்லாத நிலையில் இருக்கக்கூடிய ஒரு தலைவர் அரசியலில் தத்து குட்டி ஒரு மூத்த தலைவர் இப்படி செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டும் என சொல்வது என்கின்ற பேச்செல்லாம் அவர் இன்னும் அரசியல் பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் தான் உணர்கிறோம்.

அவருடைய மதிப்பீடு தவறு எல்லா நிலையிலும் உயர்ந்த தலைவர் முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய மத்திய அரசின் இடையூறை மீட்டு தமிழகத்தை வெற்றி பாதையில் ஈட்டு செல்கின்ற பணிக்கு மக்கள் பெரிய அளவில் ஆதரவு தருகிறார்கள். இது 2026 தேர்தலிலும் பிரதிபலிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன், எம்.பி., ச.முரசொலி, தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.