தமிழ்நாட்டில் தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடுவதற்கு தடை விதித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அரசு அறிவிப்புகள், உள்ளூர் அறிவிப்புகள் தொடங்கி மழை, வெள்ள எச்சரிக்கை வரை அனைத்தும் இன்றுவரை தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தண்டோராவுக்கு தடை
தமிழ்நாட்டில் பண்டைக் காலம் முதலே முரசு கொட்டும் வழக்கம் நிலவி வரும் நிலையில், இன்றைய தண்டோரா போடும் பணியினை துப்புரவாளர்கள், குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஈடுபடுத்தப்படுவதாகவும், இவர்கள் சாமி என தங்கள் அறிவிப்பை முடிப்பதாகவும் முன்னதாக சர்ச்சை எழுந்து பேசுபொருளானது.
இந்நிலையில், அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழலில் தண்டோரா தேவையில்லை எனவும் தண்டோராவுக்கு தடை விதிக்கவும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
’அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது’
இது தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"மக்களிடம் முக்கியச் செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.
அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பமும் பெருகிவிட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை, ஒலி பெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வரச் செய்வதன் மூலம் மூலைமுடுக்குகளில் எல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும்.
எனவே தண்டோரா போடக் கடுமையாக தடை விதிப்பது நல்லது, மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தண்டோரா வழக்கம்
முன்னதாக கொரோனா ஊரடங்கு காலத்தின்போது தடுப்பூசி வழங்குதல், தடுப்புகள் அமைத்தல் குறித்த உள்ளூர் அறிவிப்புகள், அரசு அறிவிப்புகள் என அனைத்தும் தண்டோரா மூலமே அறிவிக்கப்பட்டது.
தண்டோரா எனும் வார்த்தை உருது வார்த்தையிலிருந்து புழக்கத்துக்கு வந்தது என்று கூறப்படுகிறது. இதற்கு பறை சாற்றுதல், பறை அறைதல் என்பதே பொருள்.
மன்னர்கள் காலம் தொட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து மன்னர்களின் உத்தரவுகளையும் தகவல்களையும் தெரிவிக்க உதவும் தொடர்பு சாதனமாக இந்த தண்டோரா முறை இருந்து வருகிறது.
மேலும் படிக்க: உலகை மிரள வைத்த இலங்கை போராட்டம்...முடிவுக்கு கொண்டு வர துடிக்கும் ஆளும் வர்க்கம்...பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்