திருவாரூர் கமலாலயக் கரையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் உற்சாகமாக வழிபாடு நடத்தினர்.
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு நாளன்று பெண்கள் தங்களது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள ஆறு குளம் வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் பழம், பூ, மஞ்சள், அரிசி உள்ளிட்டவைகளை வைத்து வழிபாடு நடத்தி தீபாரதனை காண்பித்து பழம் அரிசி போன்றவற்றை நீர் நிலைகளுக்கு படைத்து அதனை தண்ணீரில் விடுவது வழக்கம். அதேபோன்று விவசாயிகளும் ஆடி பட்டம் தேடி விதைக்கணும் என்கிற முதுமொழிக்கு ஏற்றவாறு ஆடிப்பெருக்கு அன்று சிறப்பு வழிபாடு நடத்தி சம்பா சாகுபடிக்கான விதைத்தெளிப்பில் ஈடுபடுவதும் வழக்கம். இந்த வருடம் மேட்டூர் அணையில் முன்கூட்டியே மே 24ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு விட்டதால் தற்போது பெரும்பாலான விவசாயிகள் குருவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழர்களிடையே இயற்கை வழிபாடு என்பது ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குறிப்பாக பஞ்சபூதங்களான ஆகாயம் நிலம் நீர் காற்று நெருப்பு என அனைத்தையும் வழிபடும் பழக்கம் என்பது தமிழர்களிடையே நிலவி வருகிறது. அதன் அடிப்படையில் காவிரி தாய்க்கும் நீர் நிலைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு இந்த ஆடிப்பெருக்கு என்பது கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும், ஆடிப்பெருக்கு என்பது இந்துக்களின் சிறப்பு வழிபாட்டு நாளாகும். தமிழகம் முழுவதும் இன்று ஆடி பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆறுகளுக்கு சென்று பழங்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை வைத்து வணங்கி வழிபாடு நடத்தி தங்கள் கை மற்றும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி மகிழ்வர். விவசாயிகளும் இந்த நாளில் வழிபாடு நடத்தி சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்வர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் மே 24ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் கரையில் புதுமண தம்பதிகளும், பெண்கள், சிறுவர்கள் என பலர் திரண்டு வந்து குளக்கரையில் பூஜை நடத்தி வழிபட்டனர்.
குறிப்பாக சுமங்கலி பெண்கள் அரிசி, பழம் போன்றவற்றை வைத்து பூஜை நடத்தி தீபாரதனை காண்பித்து பின்பு பழம் அரிசி போன்றவற்றை நீரில் விட்டனர். காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அந்த நீரால் தானியங்கள் விளைந்து பொதுமக்களுக்கு உணவு பஞ்சம் இல்லாமல் இருக்க உதவியாக இருக்கும் நீர்நிலைகளுக்கும் நீருக்கும் நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெண்கள் தங்களுக்குள் மஞ்சள் கயிறுகளை மாறி மாறி கட்டி கொண்டனர். வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளுக்கும் மஞ்சள் கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்