பல நாடுகளில் குரங்கம்மை பரவியதையடுத்து, சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளின் அவசரக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டது. இதற்கு அடுத்த நாளே, சனிக்கிழமையன்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், உலகளவில் கவலை அளிக்கும் விதமான பொது சுகாதார அவசர நிலையாக குரங்கம்மையை அறிவித்தார். 


குரங்கம்மை வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மறைமுகமாகவும் நேரடி தொடர்பின் மூலமாகவும் மனிதர்களுக்கு பரவுகிறது. தொற்று பரவிய இடத்தை தொடுவதன் மூலமாகவும் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலமாகவும் பாலியல் உறவு கொள்வதாலும் பாதிப்பு ஏற்பட்ட நபரின் சுவாசத் துளிகள் நம் மீது படுவதன் மூலமாகவும் மனிதனிலிருந்து மனிதனுக்குப் குரங்கம்மை பரவுகிறது.


உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16,000க்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன், குரங்கம்மை பரவலை எச்சரிக்கை மணியாக கருத வேண்டும் என தெரிவித்துள்ளார். 


என்டிடிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், "பெரியம்மை தடுப்பூசி திட்டங்கள் 1979-1980 முதல் நிறுத்தப்பட்டன. பெரியம்மை தடுப்பூசிகள் குரங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டு, ஐரோப்பிய மருத்துவ சங்கம் பெரியம்மைக்காக உருவாக்கப்பட்ட டெகோவிரிமாட் எனப்படும் வைரஸ் தடுப்பு மருந்துக்கு உரிமம் வழங்கியுள்ளது.


இந்த குரங்கம்மை பரவம் நமக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் எல்லா நேரத்திலும் கொடிய நோய் பரவலுக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.


பெரியம்மைக்கான தடுப்பு மருந்தை குரங்கம்மை பயன்படுத்துவது பயன் அளிக்கலாம் என தெரிவித்த அவர், ஆனால், இதற்கு அதிக ஆய்வின் தரவுகள் தேவைப்படுகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், "பெரியம்மைக்கான தடுப்பூசி இன்று, இரண்டாவது மற்றும் மூன்றாம் தலைமுறை தடுப்பூசிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், மிகக் குறைந்த அளவுகளில் உள்ளன. பெரியம்மை நோய் தற்செயலாக ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தும் விதமாக சில நாடுகள் இந்த தடுப்பூசிகளை சேமித்து வைத்துள்ளன.


இதுகுறித்து தரவுகள் தற்போது நம்மிடம் இல்லை. எனவே, இதற்கான தரவுகளை சேமிப்பது அவசியம். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) உள்ளிட்ட இந்திய மருந்து நிறுவனங்கள், தற்போதுள்ள பெரியம்மை தடுப்பூசி அவர்களுக்கு பரவலாகக் கிடைத்தால், அதை சந்தைப்படுத்தி விநியோகம் செய்வதில் பங்கு வகிக்க முடியும்.


தொற்றுநோய்க்கான தயார்நிலையைப் பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம். விஷயம் என்னவென்றால், உற்பத்தியை எவ்வளவு விரைவாக பெருக்க முடியும் என்பதுதான். இந்தியாவின் திறன் காரணமாக அவர்கள் மிக முக்கிய பங்கை வகிப்பார்கள். ஆம், பவேரியன் நோர்டிக் நிறுவனம் 16 மில்லியன் டோஸ்களைக் கொண்டுள்ளது. இது அமெரிக்க கையிருப்பின் ஒரு பகுதியாகும். 


அமெரிக்கா அந்த அளவுகளில் சிலவற்றை வேறு சில நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. எனவே நாம் ஆராய வேண்டிய ஒன்று என்னவென்றால், இந்த மருந்து தொழில்நுட்பத்தை மற்றவர்களுக்கு அளித்து பிற தளங்களில் உற்பத்தியைத் தொடங்க முடியுமா என்பதை பார்க்க வேண்டும். எடுத்துகாட்டாக, புனேவை தளமாகக் கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் இதை செய்ய முடியுமா?" என்றார்.


புதிதாக உருமாற்றமடைந்த கரோனாவை விட குரங்கம்மை தீவிரமான நோயா என தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், "இரண்டையும் நேரடியாக ஒப்பீட முடியாது. குரங்கம்மை என்பது வேறு வைரஸ். SARS-CoV-2 போன்ற அதே விகிதத்தில் உருமாற்றம் அடையாது என்பது தெளிவாகிறது. குரங்கம்மை தொற்றுநோயாக மாறுவதைத் தடுக்க வேண்டும். தொடக்க காலத்திலயே அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்றார்.