கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல் சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.   


1.நேற்று நடைபெற்ற ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


2. கர்நாடகா மாநிலத்தில் இன்று இரவு 9 மணி முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் பொதுபோக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது



 


3. சனிக்கிழமைகளிலும் மீன் சந்தைகள், சிக்கன், மட்டன் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்தது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருவதால்,     சனிக்கிழமைகளில் மீன் சந்தைகள், சிக்கன், மட்டன் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. 



 


4. தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை, ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறப்பது குறித்து கருத்துக் கேட்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆக்ஸிஜன் தயாரிப்புக்கு மட்டும் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளுடன் அனுமதி அளிக்கலாம் என்று இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 


5.  இந்தியாவில் நிலவும் கொரோனா அபாயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசி மூலம் உரையாடல் மேற்கொண்டார்.    


6. மேற்கு வங்க மாநிலத்தில் 34 தொகுதிகளுக்கு 7வது கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. எஞ்சியுள்ள 34 தொகுதிகளுக்கான, 8வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.


7.  கடந்த இரண்டு ஆண்டுகளில் ராணுவ படைகளில் இருந்து ஓய்வுபெற்ற அல்லது முன்கூட்டியே பணி ஓய்வு பெற்ற அனைத்து மருத்துவ பணியாளர்களும் அவர்கள் வசிப்பிடத்தின் அருகில் உள்ள கோவிட் சிகிச்சை மையங்களில் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்தார். 


8. அனைவருக்கும் வழங்குவதற்கு தேவையான அளவு தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.


9.கோவிட்-19 புதிய வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 நோயாளிகளுக்காகவும், கோவிட்-19 பெருந்தொற்றின் போது சுய பராமரிப்புக்கான ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவ நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


10. கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தேர்தல் பேரணிகளை தடுக்காதது ஏன் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் காட்டமாக கூறியது.