மதுரை மாநகர் பகுதியில் முதலமைச்சரின் ரோட் ஷோவிற்காக 15 கிலோ மீட்டருக்கு மேல் சாலையோரங்களில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் செல்லும் ஓடைகளை வண்ண வண்ண திரைச்சீலைகளால் மறைத்த  மதுரை மாநகராட்சி.
 
மதுரையில் ரோட் ஷோ
 
நாளை நடைபெற உள்ள தி.மு.க., பொதுக் குழு கூட்டத்திற்காக மதுரை வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையம் தொடங்கி மதுரை மாநகராட்சி பகுதிகளான பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்ரம் சோலை அழகுபுரம், பழங்காநத்தம், காளவாசல், பெத்தானியாபுரம், ஆரப்பாளையம் மற்றும் கோரிப்பாளையம், பந்தல்குடி வழியாக மதுரை அழகர்கோவில் சாலை பகுதியில் உள்ள தங்கு விடுதி வரை இன்று ரோட் ஷோ நடத்தவுள்ளார். முதலமைச்சர் ரோட் ஷோவிற்காக அவனியாபுரம் தொடங்கி ஆரப்பாளையம் வரை சாலை முழுவதிலும் புதிய தார் சாலைகள் பள பளவென அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் அருகில் இருக்கக்கூடிய பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடியிருப்புகள் அமைந்துள்ள சாலைகள் முழுவதும் பள்ளமாக பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய முடியாத அளவிற்கு உள்ளது. இதேபோன்று முதலமைச்சர் ரோட் ஷோ நடத்தக்கூடிய பகுதி முழுவதிலும் இரவை கூட பகல் போல மாற்றும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
 
திரைச்சீலைகள்
 
முதலமைச்சர் வருகைக்காக சாலைகளில் தூசு கூட இருக்கக் கூடாது என்பதற்காக காலை முதலாகவே மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலைகளை சுத்தம் செய்து வருகின்றனர். இதனால் சாலை முழுவதும் மண், தூசி எழும்புவதால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படும் நிலை உருவானது. இதனிடையே பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை அழகர்கோவில் சாலை வரை வழி நெடுகிலும் முதலமைச்சர் பார்வையில் எந்தவித குப்பைகளும் கழிவுநீர் கால்வாய்களும் தெரிந்து விடக்கூடாது, என்பதற்காக 15 கிலோமீட்டர் தூரத்திற்கு கழிவு நீர் ஓடைகள் மற்றும் குப்பைகள் கொட்டும் பகுதிகள் முழுவதிலும் திரைச்சீலைகளை வைத்து மறைத்துள்ளனர். 
 
பொதுமக்கள் எதிர்ப்பு
 
மதுரை மாநகராட்சி பந்தல்குடி செல்லூர் ஒட்டிய பந்தல்குடி கால்வாய் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளான நிலையில் இரண்டு புறங்களிலும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும்.., என முதலமைச்சர் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் என அனைத்து தரப்பினரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர். அப்போது போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால் இதுவரையும் பந்தல்குடி கால்வாய் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்காத நிலையில் முதலமைச்சர் அதே பகுதிக்கு வருகை தருகிறார், என்பதால் செய்த வாக்குறுதியை மறைக்க வேண்டும் என்பதற்காக பந்தல்குடி கால்வாயை மறைத்து திரைச்சீலைகள் அமைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள்  கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
 
பொதுமக்கள் கொந்தளிப்பு
 
மேலும் அந்த பகுதியில் எங்களுக்கு தேவை இரண்டு புறங்களிலும் தடுப்புச் சுவர் என பதாகைகளை வைத்தனர். பின்னர் முதலமைச்சர் வரும்போது போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்த சில நொடிகளில் அவசர அவசரமாக வந்த மாநகராட்சி அதிகாரிகள் திரைச்சீலைகளை முழுவதிலும் அகற்றினர். மேலும் அந்த பகுதியில் வி.சி.க., சார்பில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகையை சுற்றிலும் திரைச்சீலைகள் அமைக்கப்பட்டதால், அங்குள்ள வி.சி.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உடனடியாக திரைச்சீலைகள் முழுவதுமாக அகற்றப்பட்டன. மேலும் பந்தல்குடி கால்வாயை சுற்றி உள்ள பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை கூட விட்டு வைக்காமல்  ட்ரை சைக்கிள், கார், பைக் போன்ற வாகனங்களோடு சேர்த்து திரைச்சீலைகளை அமைக்கப்பட்டது.