தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்று பாமக. ராமதாஸ் உருவாக்கிய இந்த கட்சிக்கு வட தமிழகத்தில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. மேலும், பாமக-வின் வாக்கு சதவீதம் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாகவும் உள்ளது.
பாமக-வில் உச்சகட்ட மோதல்:
இந்த நிலையில், சமீப காலமாக பாமக-வில் நடக்கும் மோதல் கட்சியின் நிர்வாகிகளை கலங்கடித்து வருகிறது. கட்சியை உருவாக்கிய ராமதாசிற்கும், பாமக-வை எதிர்காலத்தில் வழிநடத்துவார் என்று கருதப்பட்ட அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நடக்கும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
கடந்தாண்டு இந்த மோதல் அரசல் புரசலாக வெளியில் வந்த நிலையில் தற்போது வெளிப்படையாக அவர்கள் வாயிலாகவே தொடர்ந்து வெளி வருகிறது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சண்டை:
அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கிய குற்றச்சாட்டுகளும், அவரது ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்கியும் அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில், அன்புமணியோ தனது மன உளைச்சலுக்கு தற்போதுதான் விடுதலை கிடைத்துள்ளது என்றும், கட்சியில் ஒருவரை சேர்க்கவும், நீக்கவும் தனக்கு மட்டுமே அதிகாரம் என்றும் பேசியிருப்பது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் யார் உத்தரவை கடைப்பிடிப்பது என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆடிட்டருடன் சந்திப்பு:
இந்த நிலையில், ராமதாஸ் தனது ஆடிட்டருடன் இன்று அவசரம், அவசரமாக சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் அவர் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடனும் ராமதாஸ் ஆலோசித்துள்ளார்.
சமாதானப்படுத்த முயற்சி:
அதேசமயம், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட அவகாசம் இல்லாத சூழலில் ராமதாஸ் - அன்புமணி மோதல் போக்கில் இருப்பது கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களுக்கும், தீவிரமான தொண்டர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த ஜிகே மணி போன்ற பலரும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் சமாதான நடவடிக்கைக்கு தந்தை - மகன் இருவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ராமதாஸ் எங்கள் குலதெய்வம்
இந்த சூழலில், சென்னை சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகளை இரண்டாவது நாளாக இன்று அன்புமணி சந்தித்து வருகிறார். பாமக நிறுவனர் ராமதாஸ் எங்கள் குலதெய்வம், அவரது கொள்கையை நிறைவேற்றுவோம். அவர் கொள்கை வழிகாட்டி என்று அன்புமணி ராமதாஸ் இன்று நடக்கும் கூட்டத்தில் பேசியுள்ளார். அதேசமயம், கட்சியினர் எனக்கு அடிபணியுங்கள் என்று நினைக்க மாட்டேன் என்றும், கட்சிக்கு நானே தலைவர் என்றும் அன்புமணி உறுதியுடன் தெரிவித்துள்ளார். மேலும், அன்புமணியை பாமக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் நேரில் சந்தித்தனர். பாமக-வின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அன்புமணி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
ராமதாஸ் தொடர்ந்து அன்புமணியை விமர்சித்து வரும் நிலையில், அன்புமணி அவரை குலசாமி என்று பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதன்மூலம் அன்புமணி ராமதாசுடன் சமாதானத்திற்கு உடன்படுகிறார் என்றே பாமக-வின் தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.