உலகப் பணக்காரர்களை ஒன்றிணைக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி இந்திய நகரங்களில் நடைபெற்று வருகிறது. மே 30 வரை போட்டிகள் நடைபெற இருக்கிறது.  இதற்கிடையே டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் கொரோனா காலத்தில் குடும்பத்தையும் உறவினர்களையும் பார்த்துக்கொள்வதற்காக 2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகிக்கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.


அஸ்வின் தவிர ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் சம்பா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆண்ட்ரியூ டய் ஆகியோரும் தனிப்பட்ட காரணங்களால் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளனர். அவர்களும் இந்தியாவில் பெருகிவரும் கொரோனா பெருந்தொற்று காரணமாகத்தான் போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.




மற்றொருபக்கம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் கொரோனா பேரிடரின் முக்கியத்துவம் கருதி இந்த வருடத்தின் ஐ.பி.எல். போட்டிகள் பற்றிய செய்திகளை வெளியிடப் போவதில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. டெல்லி, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை என நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாகவும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்துவரும் நிலையில் அதே நகரங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது அறமா என்கிற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.




ஐ.பி.எல் தொடங்கிய ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் நாளொன்றுக்குச் சராசரியாக 90,000 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.


நாடு முழுவதும் இதுவரை 173 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1 லட்சத்து 95 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தியே ஆகவேண்டுமா என்கிற கேள்வியையும் மக்களில் ஒருதரப்பினர் எழுப்பிவருகின்றனர். ஐ.பி.எல் தொடங்கிய ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் நாளொன்றுக்குச் சராசரியாக 90 ஆயிரம் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இவை பெரும்பாலும் பொதுக்கட்டுப்பாடுகளை மக்கள் மீறியதால் அதிகரித்தவை.




ஆனால் 14வது ஐ.பி.எல். போட்டிகள் எவ்வித பாதிப்புமின்றி நடைபெற்றுவருவதாக உறுதியாகச் சொல்கிறது ஐ.பி.எல். நிர்வாகம். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அண்மையில் அவர்கள் அளித்திருந்த பேட்டியில் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் தங்குவதற்கான தனி பயோ பப்பிள் என்னும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கக்கப்பட்ட பகுதிகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்குக் கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.




ஆனால் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே அக்ஸர் பட்டேல், தேவதத் படிக்கல், நிதிஷ் ரானா ஆகியோருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இவர்கள் தவிர முன்னாள் கிரிக்கெட் வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகருமான கிரண் மோரேவுக்கும் கொரோனா உறுதியாகிருந்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் டேனியல் சாம்ஸ் சென்னை வந்து சேரும்போதே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார்.




60 போட்டிகளில் 10 போட்டிகள் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் படி திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஸ்டேடியத்தின் பணியாளர்கள் பத்து பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். கொடுமையாக, ஐ.பி.எல்.யின் எட்டு அணிகளில் ஐந்து அணிகள் மும்பையில் தங்கிதான் பயிற்சி எடுத்துவருகின்றன. இந்தியாவின் அதிகம் கொரொனா பாதிக்கப்பட்ட நகரம் மும்பை என்பதை இங்கே பதிவு செய்யவேண்டியிருக்கிறது.




ஏன் கடந்த ஆண்டைப் போல ஐ.பி.எல். போட்டிகளை ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தவில்லை. பார்வையாளர்களுக்கு அனுமதியில்லாத நிலையில் எதற்காக ஆறு வெவ்வேறு நகரங்களில் போட்டியை நடத்தவேண்டும்?


இத்தனைக்கும் நடுவே போட்டியைத் தீவிரமாக நடத்துவது பல சந்தேகங்களை எழுப்பியது, கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை மிகவும் மோசமாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனமே இந்த நிலை அதீதக் கவலை அளிப்பதாகச் சொல்லியிருக்கிறது. இந்தச் சூழலில் ஏன் கடந்த ஆண்டைப் போல ஐ.பி.எல். போட்டிகளை ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தவில்லை. பார்வையாளர்களுக்கு அனுமதியில்லாத நிலையில் எதற்காக ஆறு வெவ்வேறு நகரங்களில் போட்டியை நடத்தவேண்டும் என்கிற கேள்வியை ஒருதரப்பினர் எழுப்புகின்றனர். 


கடந்த ஆண்டு அரபு நாடுகளில் போட்டிகளில் நடைபெற்றபோது இந்தியாவில் கொரோனா எண்ணிக்கையும் கட்டுப்பாட்டில் இருந்தது. அரபு நாடுகளிலும் ஷார்ஜா, அபுதாபி, துபாய் என மூன்று நகரங்களில் மட்டும்தான் போட்டிகள் நடைபெற்றன.




ஆனால் அரபு நாடுகளில் நடத்திய அளவுக்குப் பாதுகாப்புடன் இந்தியாவில் போட்டிகளை நடத்தமுடியும் என்கிறது ஐ.பி.எல். தரப்பு. ’பயோ பபிள்கள் வீரர்களுக்குத் தேவையான நூறு சதவிகிதப் பாதுகாப்பை வழங்குவதால் எதுகுறித்தும் அச்சப்படத் தேவையில்லை என்கிறது நிர்வாம். 8 அணிகளைச் சேர்ந்த சுமார் 200 வீரர்கள் இந்த பயோபப்பிள் முறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பயோபப்பிள்களைப் பராமரிக்கும் மேலாளர்களும் நியமிக்கப்பட்டு அவர்களது தீவிரக் கண்காணிப்பில் இந்தப் பகுதி இயங்குகிறது’ என்கிறது அதன் நிர்வாகம்.  


ஐ.பி.எல்.க்கு ஆதரவாகக் கருத்துக்கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் , “பயோபப்பிளில்  அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்” என விளக்கமளித்திருக்கிறார்.ஆனால் இந்த பயோபப்பிள்கள் அத்தனைப் பாதுகாப்பானது என்பது உத்திரவாதமல்ல.       


’அதற்காக ஐ.பி.எல். போட்டிகளை ரத்து செய்வது என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்குப் பொருளாதார ரீதியாகப் பேரிடியாக இருக்கும். அதனால் உள்ளூர் கிரிக்கேட் போட்டிகள் பெரிய அளவில் பாதிக்கப்படும். ஆனால் அதற்காக ஐ.பி.எல். கிரிக்கேட் போட்டிகளை நடத்தவேண்டும் என்றில்லை’ என்கிறார் விஸ்டன் கிரிக்கெட் புத்தகங்களின் ஆசிரியர் சுரேஷ்.


ஒருவேளை இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த ஓராண்டுக் கிரிக்கெட் போட்டிகளை பாதிக்கும் என்கிறார் அவர். காரணம், நடப்பு ஐ.பி.எல். போட்டிகளுக்கும் 2022 ஐ.பி.எல். போட்டிகளுக்கான காலக்கட்டத்தில் மட்டும் இந்திய அணி 14 டெஸ்ட் போட்டிகள், 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 22 டுவெண்டி டுவெண்டி போட்டிகளில் விளையாட இருக்கிறது. மேலும் பயோபப்பிளில் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டால் அது சர்வதேசப் போட்டியாளர்களையும் பாதிக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. இதனால் மற்ற நாட்டு அணிகளின் நிலையுமே கேள்விக்குள்ளாகும்.


ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விதமாக எழுந்துள்ளது. ஆனால் இம்முறை கிரிக்கெட் பிரபலங்களே ஐ.பி.எல்., போட்டிக்கு எதிரான கருத்தை முன் வைக்கின்றனர். பார்வையாளர்கள் இல்லை பாதுகாப்பாக தான் நடத்துகிறோம் என நிர்வாகம் பதிலளித்தாலும், மரண ஓலங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சியர்ஸ் டான்ஸ் தேவையா என்கிற கேள்வி பலர் மனதிலும் ஆழமாக எழுந்திருப்பதை மறுக்க முடியாது.