தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசு போக்குவரத்து துறை மேம்பாட்டிற்காக பெரும் தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன் படி புதிய பேருந்துகள் மற்றும் போக்குவரத்து துறையில் மேம்படுத்துவதற்கான நிதி அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். 


3000 பேருந்துகள்:


தமிழ்நாட்டில் கடைக்கோடி குக்கிராமங்களுக்கும் தேவையான, தரமான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட போக்குவரத்து சேவையினை தொடர்ந்து வழங்கிட இந்த அரசு உரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் நிதியாண்டில் ஏற்கெனவே அறிவித்துள்ளபடி, 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட 1,031 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயன்பாட்டிற்கு உகந்த 750 பேருந்துகளை முற்றிலும் புதுப்பித்து இயக்குவதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதையும் படிங்க: Rameswaram Airport: ராமேஸ்வரம் மக்களுக்கு குட் நியூஸ்! இனிமேல் பறக்கலாம்! வருகிறது புதிய ஏர்ப்போர்ட்..


1125 மின்சார பேருந்துகள்: 


பெருநகரங்களில் காணப்படும் காற்று மாசுபாட்டினைக் குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் சென்னை மாநகரத்திற்கு 950 மின் பேருந்துகள், கோயம்புத்தூர் மாநகரத்திற்கு 75 மின் பேருந்துகள், மதுரை மாநகரத்திற்கு 100 மின் பேருந்துகள் மொத்தம் 1125 மின் பேருந்துகள் உலக வங்கி மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.


கிண்டியில் போக்குவரத்து முனையம்:


பெருகி வரும் நகரமயமாதலில் மிக முக்கியமான தேவையாக பேருந்து, புறநகர் இரயில்வே மற்றும் மெட்ரோ இரயில் போக்குவரத்து போன்ற பல்வேறு வசதிகளை ஒருங்கிணைக்கும் முனையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அந்த வகையில் இவற்றை ஒன்றிணைக்கும் பன்முகப் போக்குவரத்து முனையம் ஒன்று. கிண்டியில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயணியருக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்படும். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலும் 'இதேபோன்று பன்முகப் போக்குவரத்து முனையம் ஒன்று. நவீன பயணியர் வசதிகளுடன் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.


இதையும் படிங்க: ECR-க்கு ரூ.2100 கோடி.. திருவான்மியூர் To உத்தண்டி உயர்மட்ட சாலை.. 10 நிமிஷத்துல போயிடலாம்..!


சிற்றுந்துத் திட்டம்: 


கடந்த 1997-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய சிற்றுந்து (Mini Bus) திட்டம் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகர்ப்புரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளிலும் போக்குவரத்துச் சேவையை வழங்கிடும் வகையில், மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் சுமார் 2,000 வழித்தடங்களில் சிற்றுந்துத் திட்டம் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.


2,000 கோடி ஒதுக்கீடு:


போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாட்டுத் திறன். சேவை வழங்கல் மற்றும் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக, போக்குவரத்துக் அடிப்படையிலான கழகங்களுக்கு ஊக்கத் செயல்பாட்டின் தொகை வழங்குவதற்காக, 2,000 கோடி ரூபாய் தொகையுடன் ஊக்க நிதியம் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும். மேலும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சேவையினை மேம்படுத்தும் வகையில், சென்னை நகரக் கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ் செயல்திறன் இடைவெளி நிதியாக 646 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்


இந்த வரவு-செலவுத் திட்டத்தில் மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கான 3,600 கோடி ரூபாய், மாணவர்களுக்கான பேருந்துக் கட்டண மானியத்திற்காக 1782 கோடி ரூபாய், டீசல் மானியத்திற்காக 1857 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் போக்குவரத்துத் துறைக்கு 12964 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.