ராமேஸ்வரத்தில் சுற்றுலாத்துறை மேம்படுத்தும் நோக்கத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
ராமேஸ்வரம்:
தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர், ராமேஸ்வரத்தில் மிக அருகில் தனுஷ்கோடி இருப்பதால் அங்குள்ள அரிச்சல்முனை பகுதிக்கு வருடத்தின் அனைத்து நாட்களிலும் மக்கள் வந்து செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.
புதிய விமான நிலையம்:
ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு விமான நிலையங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை நன்கு உணர்ந்த இந்த அரசு, சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு உரிய நிலங்களைக் கையகப்படுத்தி, 2,938 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. மேலும், சேலம் விமான நிலையத்திற்கென 350 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னைக்கு அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தென் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படும்.
ஏற்கெனவே ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை மற்றும் வடமாநிலங்களுக்கு ரயில் சேவை இருந்தாலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல நேரம் அதிகம் எடுத்துக்கொள்வதால் இந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.