மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே திருவெண்காட்டில் அமைந்துள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில். காசிக்கு இணையான 6 தலங்களில் ஒன்றாக இக்கோயில் விளங்குகிறது, ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோரமுகத்துடன் இங்கு அகோரமூர்த்தி தனிச்சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது கூடுதல் சிறப்பம்சமாகும். நவக்கிரகங்களில் ஒன்றான புதன் பரிகார தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது. இங்கு சிவனின் கண்களில் இருந்து 3 தீப்பொறிகள் விழுந்தாகவும் அந்த இடங்கள் சூரியன் தீர்த்தம், சந்திரன் தீர்த்தம் , அக்னி தீர்த்தம்  என்ற பெயரில் 3 குளங்களாக அமைந்துள்ளன. மேலும், படைப்பு கடவுளான பிரம்மா தனது மூச்சை அடக்கி இந்த கோயிலில் தியானம் செய்து வருவதாகவும் ஐதீகம் உள்ளது.




இங்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு நேரத்தில் அகோர மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத 3 -வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று இரவு அகோரமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.


இதை முன்னிட்டு  காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. மாலையில் துர்கா ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட காவடிகளை எடுத்து வந்து வழிப்பட்டனர். இதனை தொடர்ந்து அகோரமூர்த்திக்கு பல்வேறு நறுமண பொருட்களால் சுமார் 4 மணி நேரம் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.




இந்த விழாவையொட்டி துர்கா ஸ்டாலின் ஏற்பாட்டின்படி  அகோரமூர்த்தி சன்னதியில் மலர்களால் பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் உள்ளிட்ட பல திமுக கட்சியினர் கலந்து கொண்டனர். முதல்வரின் மனைவி வழிபாட்டிற்காக, திருவெண்காடு காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபபட்டனர். முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் பூர்வீக வீட்டிற்கு எதிரே இந்த கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவை தாண்டி நீடித்த மழை:-


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரக்கூடிய ஐந்து தினங்களுக்கு மழை பெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை லேசாக தொடங்கிய மழை நேற்று முன்தினம் தொடங்கி நேற்று இரவும் மழை தொடர்ந்தது. மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர், செம்பனார்கோயில், தரங்கம்பாடி, சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் இரவு ஏழு மணி தொடங்கி நள்ளிரவை கடந்தும் தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்தது. மேலும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த மழை தொடர்ந்தால் சம்பா, சாகுபடி பயிர்கள் மீண்டும் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.