புரட்டாசி மாசம் என்பதால், காய்கறி வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, சந்தையில் காய்கறிகளின் விலைகள் வெகுவாக சூடுபிடித்தி வருகிறது. காய்கறிகளின் விலையேற்றத்தைத் தொடர்ந்து எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளில் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
பருப்பு விலை ஏற்றம்: முன்னதாக, அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றை நீக்க வகை செய்யும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்டத்தை மத்திய அரசு முன்னதாக கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக (மூன்று வேளான் சட்டங்கள்) விவாசய அமைப்புகள் நாடு முழுவதும் போராடி வருகின்றன.
இச்சட்டத்தின் கீழ், பருப்பு போன்ற வேளாண் பொருட்களை உற்பத்தி செய்தல், இருப்பு வைத்தல், கொண்டு செல்தல், விநியோகித்தல் மற்றும் வழங்குதலில் தனியார் முதலீட்டாளர்களுக்கு அதிகாமான சுதந்திரம் அளிக்கப்பட்டது. மேலும், ஒரு குறிப்பிட்ட வேளாண் பொருளின் சந்தை விலை கடந்த ஆண்டை விட 100% அதிகரித்தால் மட்டுமே அவை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டு வரப்படும்.
கடந்த சில மாதங்களாக பருப்பு வகைகளின் சில்லறை விலை கடந்த ஆண்டை விட பெருமளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் ஜூன் மாதம் இறுதி வரை நாடெங்கும் துவரம் பருப்பின் விலை 4.5 சதவீதமாக அதிகரித்திருந்தது.
இதுவரை இல்லாத வகையில் கடந்த நிதியாண்டில் 255 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு பருப்பு உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், பருப்புகளை பதுக்குவதன் மூலம் சந்தையில் விலை எற்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த விரும்பத்தகாத நடைமுறையை தடுக்க, நாடு முழுவதும் பருப்புகளின் இருப்பு நிலவரத்தை அவ்வப்போது தெரிவிக்கும் அணுகுமுறை முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பருப்பு மில்கள், வியாபாரிகள், இறக்குமதியாளர்கள், தங்களின் இருப்பு விவரத்தை தெரிவிக்க உத்தரவிடும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கடந்த மே 14ம் தேதி கேட்டுக் கொண்டது. ஒவ்வொரு வாரமும் பருப்புகளின் விலையை கண்காணிக்கும்படி மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன
மேலும்,பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் (விலை 4.5 சதவீத உயர்வு மட்டும் தான் அப்போது இருந்தது), பதுக்கலைத் தடுக்கவும் பாசிப்பயறு தவிர மற்ற பருப்பு வகைகளை இருப்பு வைப்பதற்கு, 2021 அக்டோபர் 31-ம் தேதிவரை மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது .
இதன்படி பருப்பு ஒட்டுமொத்த விற்பனையாளர்கள் 500 மெட்ரிக் டன் என்ற அளவிலும், சில்லறை விற்பனையாளர்கள் 5 மெட்ரிக் டன் என்ற அளவிலும் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதன் காரணமாக, கடந்த ஜூன் மாதம் முதல் பருப்பு வகைகளின் விலை சற்று குறையத் தொடங்கியது. இந்நிலையில், பெரும்பான்மையாக பருப்பு உற்பத்தி செய்யும் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கும் வரும் பருப்புகளின் வரத்து குறைந்த காரணத்தினால், விலையேற்றம் காணப்படுகிறது.
சமையல் எண்ணெய்: முன்னதாக, உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலையை குறைக்கும் நோக்கில், சமையல் எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் (Edible oils) மீதான் சேமிப்பு கட்டுப்பாடுகளை மார்ச் 31, 2022 வரை மத்திய அரசு விதித்தது.
இந்த உத்தரவின் கீழ், அனைத்து சமையல் எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சேமிப்பு வரம்பை, அந்தந்த மாநில அரசு/யூனியன் பிரதேச நிர்வாகம், மாநில/யூனியன் பிரதேசத்தின் இருப்பு மற்றும் நுகர்வு முறையின் அடிப்படையில் விதிவிலக்குகளுடன் முடிவு செய்யும்.
உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் (https://evegoils.nic.in/EOSP/) இணையதளத்தில் சமையல் எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் வித்துகளின் கையிருப்பு தொடர்ந்து பதிவேற்றப்படுவதை மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், மக்களுக்கு சமையல் எண்ணெய் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, கச்சா பாமாயில், கச்சா சோயாபீன்ஸ் எண்ணெய், கச்சா சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான நிலையான வரி வீதத்தை செப்டம்பர் மாதம் முதல் 2.5 சதவீதமாக சுங்கத்துறை குறைத்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சோயாபீன்ஸ், சூரிய காந்தி எண்ணெய்க்கான நிலையான வரி 32.5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இன்றைய சந்தை நிலவரம்: சென்னை கோயம்பேடு மார்க்கெட் உணவு தானிய அங்காடியில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை நிலவரம் வருமாறு(மொத்தவிலையில்/கிலோவில்):-
துவரம் பருப்பு-ரூ.105, உளுந்தம்பருப்பு-ரூ.120, பாசிப்பருப்பு-ரூ.105, கடலை பருப்பு-ரூ.70, சீரகம்- ரூ.100,நல்லெண்ணெய், நல்ல எண்ணெய் (லிட்டரில்)-ரூ.215, தேங்காய் எண்ணெய்-ரூ.180, கடலை எண்ணெய்-ரூ.195, பாமாயில்-ரூ.128, மிளகு-ரூ.468, வெந்தயம்-ரூ.105, கசகசா-ரூ.1,600, பாதாம்-ரூ.850, முந்திரி (முழு) -ரூ.850, முந்திரி (உடைத்தது)-ரூ.620, ஏலக்காய்-ரூ.1,200
மேலும்,வாசிக்க:
வெங்காயம் விலை ரூ.100 முதல் 120 வரை உயரலாம் - வர்த்தக வியாபாரிகள் எச்சரிக்கை!