படிப்பு பாதியில் நிறுத்தம்
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் புது நகர் ஏழாவது தெருவை சேர்ந்தவர் குமார் சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு சங்கர் ( வயது 19 ) வனிதா ( வயது 17 ) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குமார் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். சங்கர் அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்துள்ளார். படிப்பு சரியாக வரவில்லை எனக் கூறி பாதியிலேயே நின்று விட்டார்.
விளையாடும் போது கைகலப்பு
நேற்று முன்தினம் , சங்கருக்கு பிறந்தநாள் என்பதால் அவருடன் படித்த மாணவர்கள் சங்கருக்கு கேக் வெட்ட வேண்டும் என நேற்று முன்தினம் மாலை அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு அனைவரும் எருக்கஞ்சேரி பகுதியில் ஒன்றாக கால்பந்தாட்டம் விளையாடி உள்ளனர். அப்போது சங்கருக்கும் அவரது நண்பரான ஸ்டீபன் ராஜ் என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது சங்கர் ஸ்டீபன் ராஜை அடித்ததாக கூறப்படுகிறது.
சாலையில் கேக் வெட்டி கொண்டாட்டம்
அதன் பிறகு நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமாதானமாகி சென்று விட்டனர். அதன் பிறகு கருணாநிதி சாலையில் சங்கரின் பிறந்தநாளை கேக் வெட்டி நண்பர்கள் அனைவரும் கொண்டாடியுள்ளனர். அப்போது அங்கு வந்த நித்தின், லிங்கேஷ் ஆகியோர் சங்கரிடம் பிறந்தநாளுக்கு பார்ட்டி கேட்டு மது வாங்கித் தரும் படி கேட்டுள்ளனர். அதன் பிறகு அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது இறந்து போன சங்கரிடம் ஏன் ஸ்டீபன் ராஜை அடித்தாய் என கேட்டு லிங்கேஷ் , நித்தின் மற்றும் அவரது நண்பர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். திடீரென சங்கரை அடித்து துரத்திக் கொண்டு எருக்கஞ்சேரி கைலாசம் தெரு பகுதியில் உள்ள முட்புதரின் வைத்து சங்கரை வெட்டி உள்ளனர். இதில் தலை மற்றும் முகம் ஆகிய இடங்களில் பலத்த வெட்டு காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமரா மற்றும் உயிரிழந்த சங்கரின் நண்பர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொடுங்கையூர் போலீசார் ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் ( வயது 21 ) , கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ( வயது19 ) எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நித்தின் குமார் ( வயது 20 ) வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஜாபர் அகமது ( வயது 27 ) எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நவீன் என்கின்ற பாலா ( வயது 20 ) , வியாசர்பாடி பி.வி காலனி பகுதியைச் சேர்ந்த பாலாஜி ( வயது 19 ) மற்றும் கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என ஏழு பேரை கைது செய்தனர்.
மெத்தபெட்டமனுக்கு பதில் அஜினமோட்டோ
இவர்களிடம் நடத்திய விசாரணையில் உயிரிழந்த சங்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பார்ட்டி கொண்டாடுவதற்காக சங்கர் மற்றும் அவரது நண்பர் தீபக் ஆகிய இருவரும் சேர்ந்து கைது செய்யப்பட்ட நித்தின் குமார் என்பவரின் நண்பர் கந்தா என்பவரிடம் இரு தினங்களுக்கு முன்பு மெத்தபெட்டமைன் என்னும் போதை பொருள் வாங்குவதற்காக 2500 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர். கந்தா பணத்தை வாங்கிக் கொண்டு மெத்தபெட்டமைன் போதைப் பொருள் தருவதாக கூறி அஜினோமோட்டோ என்னும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருளை கொடுத்துள்ளார்.
அதனை வாங்கி பயன்படுத்திய போது அது போலி என்பதை தீபக் மற்றும் சங்கர் ஆகியோர் கண்டு பிடித்து விட்டனர். அதன் பிறகு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது சங்கர் மற்றும் அவரது நண்பர் தீபக் ஆகியோர் இது குறித்து நித்தின் குமார் மற்றும் அவரது நண்பர் ஸ்டீபன் ஆகிய இருவரிடமும் கேட்டுள்ளனர். அப்போது பிரச்சினை ஏற்பட்டு கோபமடைந்த சங்கர் கத்தியால் ஸ்டீபன் மற்றும் நித்தின் குமாரை தாக்கி அடித்துள்ளனர்.
அதன் பிறகு நித்தின் குமார் லிங்கேஸ்வரனை வரவழைத்துள்ளார் லிங்கேஸ்வரனையும் சங்கர் கத்தியால் அடித்துள்ளார். காயம் பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து நடந்த விஷயங்களை தனது நண்பர்களிடம் கூறி கைது செய்யப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து சங்கரை வெட்டியது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஏழு பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இந்த வழக்கில் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.