வெங்காயம் விளைவிக்கும் முக்கிய மாநிலங்களில் கடுமையான பருவமழை பெய்து வருவதாலும், உற்பத்தி கணிசமாக குறைந்து வருவதாலும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.   


ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பெரிய வெங்காயம் விளைவிக்கும் முக்கிய மாநிலங்களாகும். இந்த மாநிலங்களில் இருந்து அதிகளவிலான வெங்காயங்கள் கோயம்பேடு சந்தைக்கு  அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது, பருவமழை காரணமாக, பெரிய வெங்காயத்தின் தேவை மற்றும் அளிப்பு இடைவெளி அதிகரித்துக் காணப்படுகிறது.       


கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் வரை உயரமுள்ள இடங்களில் கூட பெரிய வெங்காயத்தைப் பயிரிட முடியும் என்றாலும், பயிற்செய்கை காலத்திலும், இறுதிப் பருவத்திலும் கடும் மழை பெய்யக் கூடாது. மேலும், வளிமண்டல ஈரப்பதம் 70% விட அதிகமாகும் போது, பங்கஸ் போன்ற நோய்களினால் அவைகள் பாதிக்கக்கூடும்.   



 


காரீஃப் வெங்காயம் ஜூன் – ஜூலை மாதங்களில் பயிரிடப்பட்டு, அக்டோபரில் அறுவடை செய்யப்படுகிறது. வடமாநிலங்களில்  கனமழையால் பயிா்கள் சேதமானதால் காரீஃப் பருவத்தில் வெங்காயம் உற்பத்தி 14 சதவீதம் சரிவடையும் என மத்திய உணவுத் துறை செயலா் சுதான்ஷு பாண்டே முன்னதாக தெரிவித்திருந்தார். 


இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், புரட்டாசி மாசம் என்பதால், காய்கறி வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, சந்தையில் காய்கறிகளின் விலைகள் வெகுவாக சூடுபிடித்துள்ளது. மேலும், வரத்து குறைந்துள்ளதால் தக்காளி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் அகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. வெங்காயத்தின் போக்கு இதே நிலை தொடர்ந்தால், கடந்த ஆண்டைப் போல 100 ரூபாய் மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர். 


தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகியவை சின்னவெங்காயம் விளைவிக்கும் முக்கிய மாநிலங்களாகும். தமிழ்நாட்டில், திண்டுக்கல், தாராபுரம், பெரம்பலூர், திருச்சி, தேனி ஆகிய மாவட்டங்கள் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் முக்கிய மாவட்டங்களாகும். நடப்பு சூழலில், உள்ளூர் சந்தைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து திண்டுக்கல், தாராபுரம், பெரம்பலூர், திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்தும் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் மைசூரிலும் வரத்து வரத் தொடங்கியுள்ளன. முன்பு இல்லாத அளவில், மைசூரில் இருந்து வரும் வரத்து ஆவணி மாதம் வரை நீடிக்கிறது. இருப்பினும், செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் விதை வெங்காயத்தின் தேவைகள் மற்றும் பண்டிகை காலங்களின் தேவைகள் உள்ள காரணங்களினால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சின்ன வெங்காய வர்த்தக வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.    


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண