கோட நாடு கொலை வழக்கில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் 14 பேர்கள் உயிரிழந்த சம்பவம் போல விசாரணை ஆகி விடக்கூடாது என கரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார்.
கரூரில் உள்ள தனியார் விடுதியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளேன். அவர் எனது தம்பி. அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவர் மீது வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு கடந்த ஜெயலலிதா அம்மையார் ஆட்சி காலத்தில் நடந்தது. இதுவரை இந்த வழக்கை விசாரிக்காதது ஏன்? எதற்காக இவ்வளவு நாள் காலதாமதம் செய்தீர்கள். ? நேர்மையாக உள்ளவர்களாக இருந்திருந்தால் அப்போதே அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதிமுக அமைச்சர்கள் 6 பேர் மீது வழக்கு உள்ளது. இதுவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தற்போது அமலாக்கத்துறை என்பது அமலாக்கத்துறை அல்ல, அமல் , மாமூல் துறையாக உள்ளது.
கோட நாடு முதல்வர் ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக செயல்பட்டது. தனி வழித்தடத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கக் கூடிய பகுதியாகும். அந்த இடத்தில் எப்படி மின்சாரம் தடைபட்டது.? எப்படி கொலை நடந்தது? அவரது கார் ஓட்டுநரின் சகோதரர் கொடுத்த பேட்டி காலதாமதம் என்றாலும் அது வரவேற்கத்தக்கது. இவரை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் இவருக்கு கொலை மிரட்டல் விட்டதாக அவர் தெரிவித்து இருக்கிறார். துணிந்து அவர் சொல்வதை வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் 14 பேர்களை சுட்டு கொலை செய்த சம்பவம் போல கோடநாடு கொலை சம்பவம் ஆகிவிடக்கூடாது.
திமுக, மத்திய அரசுடன் கடந்த 18 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தது. அப்போது ஏன் நீட் தேர்வு மற்றும் கட்சத் தீவு தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?. என்எல்சி நிறுவனத்தில் ஒரு தமிழர் கூட பணியில் இல்லை. தமிழ்நாட்டில் இடம் வாங்கிக் கொண்டு விரிவாக்கம் செய்து வருகின்றனர். நிறுவனங்களுக்கு ஏன் நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள திமுக - அதிமுக இரண்டு கட்சிகளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என கூறி அவர்களை வெளியேற்றட்டும் அப்படி வெளியேற்றிவிட்டால் அவர்களுக்கு எம்பி தேர்தலில் நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் செய்யும். எனது தம்பிகளை சமாதானப்படுத்திக் கொள்கிறேன். அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இவ்வாறு பேசினார். நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து சீமான் மீது புகார் அளித்து வருவது குறித்த கேள்விக்கு, அவர் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து தான் வருகிறார் வைக்கட்டும் பார்க்கலாம் என்று பதிலளித்தார்.