தமிழ்நாட்டின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரியை ஒரே நாளில் கைது செய்ய உத்தரவிட்டு, அதிரடி காட்டியிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன்.

Continues below advertisement

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏடிஜிபி-யான ஜெயராமனை நீதிமன்றத்தில் வைத்தே காவல் சீருடையில் அவர் இருக்கும்போதே கைது செய்ய வைத்து, யார் தவறு செய்தாலும் அது தவறுதான் என்ற பாடத்தை மீண்டும் ஒருமுறை எல்லோரும் அறிந்துக்கொள்ளும் வகையில் உத்தரவிட்டு தமிழ்நாட்டையே அதிர வைத்திருக்கிறார்.

கிரிமினல் ஆன போலீஸ்

Continues below advertisement

காதல் விவகாரத்தில் பெற்றோரை மிரட்டுவதற்காக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தியோடு கூட்டு சேர்ந்துக்கொண்டு, அந்த குடும்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை தன்னுடைய அரசு காரை பயன்படுத்தி கடத்திய வழக்கில்தான் வசமாக சிக்கியிருக்கிறார் ஏடிஜிபி ஜெயராமன். வழக்கமாக,  சாதாரண ஒரு போலீஸ் மீது புகாரோ, குற்றச்சாட்டுகளோ வந்தால் கூட, போலீஸ் என்பதால் அவர்கள் தப்பித்துக்கொள்ளும் வழக்கம் புரையோடிப்போயிருக்கும் சூழலில், உயர் அதிகாரியான ஜெயராமனை கைது செய்ய உத்தரவிட்டதன் மூலம், மக்கள் மத்தியில் நீதிபதி வேல்முருகனுக்கு இந்த வழக்கு மூலம் நற்பெயர் உண்டாகியுள்ளது.

யார் இந்த நீதிபதி வேல்முருகன் ?

திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பட்டி என்ற சிறு கிராமத்தில் டி.எஸ்.பெருமாள் – சின்னதாயி ஆகியோருக்கு பிறந்தவர்தான் வேல்முருகன். அவருடைய தந்தை ஆசிரியர். அதனாலேயே கண்டிப்பான குணமும், பிறருக்கு துயரம் அறிந்து உதவும் எண்ணமும் படைத்தவராக வேல்முருகன் இருந்திருக்கிறார். சிறு கிராமத்தில் பிறந்தாலும், மக்களின் துயர் துடைக்க நீதிபதியாக வேண்டும் என்ற கனவு கொண்ட வேல்முருகன், கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட நீதிபதிகள் தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்று, சிவகங்கை, மதுரை, சென்னை என பல இடங்களில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர். 

பதிவாளரில் இருந்து பதவி உயர்வு

மாவட்ட நீதிபதிக்கு பின்னர், சென்னை உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் பிரிவு பதிவாளராக பணியாற்றிய வேல்முருகன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்.

முக்கிய வழக்குகளை விசாரித்த வேல்முருகன்

  • தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய வச்சாத்தி வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டவர் வேல்முருகன்.
  • 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் போஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், அதன் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் வந்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரிய திமுக வேட்பாளராக இருந்த சரவணனின் கோரிக்கையை நிராகரித்தார்
  • இதேபோல, தமிழ்நாட்டின் புகழ் பெற்ற ராஜராஜசோழன், லோகமாதேவி சிலைகளை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி குஜராத்தின் சாராபாய் பவுண்டேஷன் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து அதிரடி காட்டினார்.
  • மிக முக்கியமாக, கடந்த 2021ல் செமன் என்ற ஆங்கில வார்த்தையை, செம்மண் என பதிவுசெய்ததை முறையாக ஆய்வு செய்யாமல், இரண்டு வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவரை விடுதலை செய்த போக்ஸோ நீதிமன்ற உத்தரவை நீதிபதி வேல்முருகன் கடுமையாக கண்டித்ததுடன், அந்த உத்தரவையும் ரத்து செய்து தீர்ப்பளித்தவர்
  • அதே நேரத்தில், பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் அமைக்க வேண்டுமெனவும், குழுக்கள் அமைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டவரும் இதே நீதிபதி வேல்முருகன் – தான்.
  • பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை பிற பிரிவினருக்கு விற்பது சட்டவிரோதமானது என்பதால், அந்த நிலத்துக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து, பஞ்சமி நிலத்தை மீட்டு, தகுதியான நிலமற்ற பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்ட அவரது தீர்ப்பு பட்டியலின மக்களுக்கு பெரும் ஒளி வெளிச்சமாக விளங்கியது.
  • டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை குற்றச் செயலாக கருதி வழக்கு பதிவு செய்ய முடியாது என்று உத்தரவிட்டவரும் இதே நீதிபதி வேல்முருகன் - தான்

போக்ஸோ ரத்து செய்யப்பட மாட்டாது.

பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பின்னர் அந்த சிறுமையையே திருமணம் செய்துக்கொண்டாலும் போக்சோ வழக்கு ரத்து செய்யப்படமாட்டாது என்றும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம்  வெகுவாக  வீணடிக்கப்படுவதாக பரபரப்பு கருத்துக்களையும் உத்தரவையும் பிறப்பித்தவர் இவர்.

ஐபிஎஸ்க்கு முன்னர் ஐ.ஏ.எஸ்

ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய பாரபட்சமின்றி உத்தரவிட்டபோல, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளரும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அன்சுல் மிஸ்ராவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாத சிறைதண்டனை விதித்தவரும் இதே வேல்முருகன் – தான் என்பது குறிப்பிடத்தக்கது.