ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் தட்சிணாமூர்த்தி. 24 வயதாகும் இவர், பெங்களூரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும் புதுப்பேட்டை அருகே அக்ராகரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகள் சுவேதாவும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த வாலிபரை மாப்பிள்ளையாக தேர்வு செய்து நிச்சயதார்த்தம் நடத்தினர்.
இதனால் விரக்தியடைந்த சுவேதா நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் வீட்டை விட்டு வெளியேறி காதலன் தட்சிணாமூர்த்தியுடன் நேற்று முன்தினம் காலை அக்ராகரம் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் இருவரும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து அறிவுரை வழங்கினர். அதன் பிறகு சுவேதா தனது கணவர் வீட்டிற்கு சென்றார்.
முன்னதாக சென்னை போரூர் காரம்பாக்கம் பகுதியில் முடித்திருத்தம் செய்யும் கடை நடத்தி வரும் ஆனந்த்,அதே பகுதியில் உள்ள பார்மஸியில் பணியாற்றும் தரணி என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆனந்த், மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும் முடி திருத்தும் வேலை செய்வதாலும் பெண்ணின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனந்த் பெண்ணின் வீட்டாரிடம் பேசி சம்மதிக்க வைக்க முடிவு செய்துள்ளார். ஆனால் பெண்ணின் வீட்டாரிடம் பலமுறை பேசியும் பெண்ணின் வீட்டில் ஒப்புக் கொள்ளாததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திருமணம் செய்த கையோடு எங்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
வளசரவாக்கம் காவல் துறையினர் பெண்ணின் வீட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பெண் வீட்டார் சார்பில் தம்பதிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க