75 Rupee Coin: நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வில் தபால் தலை மற்றும் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.


நாடாளுமன்ற கட்டிடம்


டெல்லியில் தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதனால் கடந்த 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 1,200 கோடி ரூபாய் செலவில், 18 ஏக்கர் அளவுக்கு அதாவது 64,500 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிடத்தை பிரதமர்  நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.  இதற்கான பூஜைகள் செய்யப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு நிறைவடைந்தது. புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் மோடி தமிழ்நாடு ஆதீனங்ளால் வழங்கப்பட்ட செங்கோலை நிறுவினார். 


64,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் 888 மக்களவை உறுப்பினர்கள் 384 மாநிலங்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2026ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள தொகுதி மறுசீரமைப்பைக் கருத்தில் கொண்டு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


நாணயம் வெளியீடு


இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை நினைவு கூறும் வகையில், 75 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் இணைந்து  வெளியிட்டனர். 






எப்படி இருக்கும்?



  • 75 ரூபாய் நாணயம், 44 மில்லி மீட்டர் விட்டமும், 35 கிராம் எடையும் கொண்டுள்ளது.

  • 75 ரூபாய் நாணயத்தின் விளிம்புகளில் 200 சிறு சிறு பற்கள் இருக்கும்.

  • இந்த 75 ரூபாய் நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல் என்ற உலோக கலவையில் உருவாக்கப்பட்டுள்ளது.

  • நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோகத் தூணில் உள்ள சிங்க முகங்களும் அதன் கீழே ’சத்யமேவ ஜெயதே’ என்ற வாசகமும் இடம்  பெற்றிருக்கும்.

  • 75 ரூபாய் நாணயத்தின் பின்புறம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படம், அதன் கீழே 2023 என்று பொறிக்கப்பட்டிருக்கும்.

  • நாடாளுமன்ற கட்டிடத்தின் கீழே, 'சன்சாத் சங்குல்' என தேவநாகிரி எழுத்துகளிலும், ’Parliment Complex' என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

  • நாணயத்தின் முன்புறம் அசோக சின்னத்தின் கீழே 75 ரூபாய் என்பதை குறிப்பிடும் வகையில் ரூபாய் சின்னமும், அருகே 75 எனவும் பொறிக்கப்பட்டிருக்கும்.

  • மேலும், நாணயத்தின் இடது பக்கத்தில் பாரதம் என்று தேவநாகிரி எழுத்திலும், வலது பக்கத்தில் இந்தியா என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க 


Modi In New Parliament: சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய பிரதமர் மோடி.. புதிய நாடாளுமன்றத்தில் தமிழக செங்கோல்..