தமிழகத்தில் கடைசியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய பெரிய நகரமாக சீர்காழி இருந்து வருகிறது. இங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள், பல அரசு அலுவலர்களும் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் சீர்காழியில் கொரோனா பரவல் தொடங்கிய கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சீர்காழி ரயில்நிலையத்தில் இரு மார்கங்களிலும் பல்வேறு விரைவு ரயில்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்று வந்தன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு இயக்கப்பட்டன. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கத்திற்கு பிறகு முன்பு சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று சென்ற 13 க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. இதனால் வணிகர்கள், மாணவ, மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும், பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒரு சில விரைவு ரயில்களில் செல்ல வேண்டும் என்றால் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மயிலாடுதுறை அல்லது சிதம்பரம் ரயில் நிலையம் சென்று ரயிலைப் பிடிக்கும் அவல நிலை தொடர்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் பயணிகள். இதனால் பாதிக்கப்பட்ட ரயில் பயணிகள் தென்னக ரயில்வே இனியும் தாமதிக்காமல் சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினருடன் இணைந்து வர்த்தகசங்கத்தின், தன்னார்வலர் அமைப்பினர், பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் இணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்காழி ரயில் நிலையம் வாசலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் எந்தவித முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இதனால் அடுத்தகட்டமாக மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் க்கு கோரிக்கையை வலியுறுத்தி 5 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தில் ஈடுப்பட முடிவு செய்துள்ளனர். அதற்காக பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துதரப்பினரிடம் இருந்தும்கோரிக்கை எழுதப்பட்ட தபால் அட்டைகள் பெற்று மத்திய அமைச்சருக்கு அனுப்பிட இரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் ஈடுப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக சுமார் ஆயிரம் தபால் அட்டைகள் எழுதப்பட்டுள்ளது என்றும், விரைவில் 5 ஆயிரம் தபால் அட்டைகளையும் சேகரித்து வரும் வாரத்தில் மத்திய அமைச்சருக்கு அனுப்பஉள்ளதாக தெரிவித்துள்ளனர்.