மாதவிடாய்


உலகத்தின் நகர்வே இனப்பெருக்கத்தின் மூலம்தான் நடந்து வருகிறது. உயிர்கள் மறைவதும், உயிர்கள் பிறப்பதுமே இவ்வுலகத்தின் நகர்வு. இப்படியாக உலகத்தையே இயக்குவது தாய்மைதான். அந்த தாய்மையின் உடல் ரீதியான ஒரு நிகழ்வுதான் மாதவிடாய். இங்கு ஆதரவாகவும், மூடத்தனமாகவும் கருத்து தெரிவிக்கும் யாராக இருந்தாலும் அந்த மாதவிடாயின் தொடர் நிகழ்வுகளால்தான் பூமியில் பிறந்துள்ளனர். ஆனாலும் 2022ம் ஆண்டான இந்த நாளில்கூட மாதவிடாய் என்பது ஒருவித தீண்டாமையாக பார்க்கப்படுவது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. 


பருவமடைந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் இயற்கை நிகழ்வாக இருந்தாலும் இது சாதாரண உடல்மாற்றம் என்ற எண்ணம் இதுவரை இந்த சமூகத்தில் வரவில்லை. அதேபோல் நாப்கின்கள், பெண்களுக்கான கழிவறைகள், அலுவலங்களில் பெண்களுக்கான நேரம் என அனைத்து விதத்திலும் மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வு இன்னமும் சென்று சேரவில்லை. நேரமில்லாமை, சரியான இடம் இல்லாமை போன்ற காரணங்களால் ஒரே நாப்கின்கள் பயன்படுத்துவது, சரியாக சுத்தம் செய்யப்படாமல் நீண்ட நேரம் சமாளிப்பது போன்ற விஷயங்கள் பெண்களிக்கு தொற்று நோய்களையும், பாலியல் தொடர்பாக சிக்கல்களையும் உண்டாக்குகின்றன். 




மாதவிடாய் சுகாதார தினம்


இன்று உலக மாதவிடாய் சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2022 ஆண்டுக்கான இந்த தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான நடைமுறைகளை வழங்கவும் உலக மாதவிடாய் சுகாதார தினம் மே 28 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.


ஏன் மே 28?


ஒரு கருவுறுதல் சுழற்சி என்பது 28 நாட்களுக்கு நீடிப்பதால், தேதி 28 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, சராசரி மாதவிடாய் ஐந்து நாட்கள் நீடிக்கும் என்பதால்,வருடத்தின் 5வது மாதமான மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.




இந்த வருடத்தின் கருப்பொருள்..


2022ம் ஆண்டுக்கான உலக மாதவிடாய் சுகாதார தினத்தின் கருப்பொருள் என்னவென்றால், ''‘2030 ஆம் ஆண்டளவில் மாதவிடாயை வாழ்க்கையின் இயல்பான ஒன்றாக மாற்றுவது’’ என்பதுதான். இது வெறும் கருப்பொருள் மட்டுமே இல்லாமல் ஒரு இலக்காகவும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல., மாதவிடாயை தாழ்வான ஒன்றாக பார்ப்பதையும் மாற்றி இயல்பான ஒன்றாக மாற்ற வேண்டுமென்பதும் இந்த தினத்தின் கருப்பொருளின் நோக்கமாக உள்ளது


இன்றும் மெடிக்கல்களில் நாப்கின்கள் மறைத்து மறைத்து கொடுக்கும் நிலை இருப்பதே மாதவிடாய் மீதானே விழிப்புணர்வின் நிலையை தெள்ளத்தெளிவாக காட்டுகின்றன. எந்த நாளில் வீட்டுப்பெண்களுக்கு நாப்கின்கள் வாங்குவதை ஆண்கள் சகஜமாக நினைக்கிறார்களோ, எந்த நாளின் மெடிக்கல்கள் நாப்கின்களை ஒளிவுமறைவின்றி கொடுக்கிறார்களோ அன்றைய தினமே மாதவிடாய் சுகாதார தினத்தின் நோக்கம் நிறைவேறியதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.