Dr.Cuterus என்னும் பெயரில் பாலியல் நலன் நிபுணரான டாக்டர் தனாயா, மாதவிடாயின்போது பயன்படுத்தும் பேஸ்டீஸ் அல்லது ஜட்டிகள் மட்டும் ஆரஞ்சு நிறமாக மாறுவது ஏன் என நம்மில் பலருக்கு இருக்கும் குழப்பத்துக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.


”பெண்களின் பிறப்புறுப்பில் எப்போதும் குறைவான PH-இல் திரவம் சுரப்பது இயல்பானது. அமிலத்தன்மையும், குறைவான PH காரணமாகவும்தான், மாதவிடாயின்போது ரத்தம் உள்ளாடைகளின் மீது படும்பொழுது, அந்த இடம் ஆரஞ்சு நிறத்தில் ப்ளீச் செய்ததைப்போல மாறுகிறது” என விளக்கம் அளித்திருக்கிறார் தனாயா. அடர்த்தியான நிறங்களில் உள்ளாடைகளை பயன்படுத்தும்போது, இப்படி ஆரஞ்சு நிறத்தில் தெரிவது இயல்பானது. இதைக் கண்டு பயப்படவேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறார் மருத்துவர் தனாயா.





மாதவிடாயின் கடைசி நாட்களில், ரத்தம் பழுப்பு நிறத்தில் வெளியேறுவதைக் குறித்தும் விளக்கியிருக்கிறார். அது அமிலத்தால் ஏற்படும் மாற்றம் மட்டுமே என்கிறார். மாதவிடாயின் கடைசி நாட்களில் ரத்தம் வெளியேறுதல் வேகம் குறையும்போது, அது பிறப்புறுப்பின் PH லெவலுடன் இணைந்து பழுப்பு நிறத்தில் வெளியேறுவதாகவும், அதில் பயப்பட எதுவுமில்லை என்கிறார்.


பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்? எந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்வது நல்லது? என்னும் மிக அடிப்படையான, ஆனால் மிக முக்கியமான விஷயங்களுக்கு விளக்கமளித்திருக்கிறார்.


மிதமான, அதிக வேதிப்பொருட்கள் அற்ற சோப்பைப் பயன்படுத்தலாம். அல்லது மிதமான Intimate Wash பயன்படுத்தலாம். ஆனால் அதில் எந்த நறுமணமும், அல்லது க்ளிட்டர் போன்ற தயாரிப்புகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் நறுமணமூட்டப்பட்ட வாஷ்கள் நிச்சயம் அரிப்பை ஏற்படுத்தும் என்கிறார். மேலும் பிறப்புறுப்பை சுத்தம் செய்யும்போது, பிறப்புறுப்புக்குள் விரலைவிட்டு சுத்தப்படுத்துவது தவறானது. ஏனெனில் பிறப்புறுப்புக்குள் எந்த திரவமும், அல்லது திடப் பொருளாக அழுக்கும் சென்று சேர்வதில்லை. விரல்களை உள்ளே விட்டு சுத்தம் செய்வதால் தேவையற்ற தொற்று ஏற்படலாம். பிறப்புறுப்பின் பக்கவாட்டு பகுதி, அதாவது உதடு போன்ற பகுதியை மட்டுமே சுத்தம்செய்ய வேண்டும் என்கிறார் தனாயா.


சிலருக்கு சோப்பு பயன்படுத்துவது அரிப்பு ஏற்படுத்தலாம் என்பதால், மிதமாக சூடுசெய்யப்பட்ட நீரையே பயன்படுத்தி பிறப்புறுப்பைச் சுத்தப்படுத்தலாம் என்கிறார். மேலும், பிறப்புறுப்பை சுத்தம்செய்யும்போது, மேலிருந்து கீழாக, (அதாவது இடுப்புப் பகுதியில் இருந்து கீழ்நோக்கி சுத்தம் செய்ய வேண்டும்) கீழிருந்து மேல்பக்கமாக சுத்தம் செய்தால், பின்புறத்தில் இருக்கும் அழுக்கின் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் விளக்குகிறார். இனி பாலியல் ஆரோக்கியம், மனநலம், மருத்துவர்களின் முக்கியமான ஆலோசனைகளைக் குறித்து அறிந்துகொள்ள Abpநாடு தளத்தை பின்பற்றுங்கள்..