தீபாவளிக்கு தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த மக்கள்


 

தீபாவளி என்பது ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும், நடப்பாண்டில் நேற்று வியாழக்கிழமை தீபாவளி வந்ததை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. இதன்காரணமாக வார இறுதியுடன் சேர்த்து, மொத்தமாக நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அமைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, சென்னையில் இருந்து மட்டுமே லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தென்மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை என பல்வேறு மாவட்டங்களுக்கும் மக்கள் படையெடுத்தனர். இந்நிலையில் தென் மாவட்டங்களில் முக்கிய பகுதியாக விளங்கும் மதுரையில் அதிகளவு கூட்டத்தை பார்க்க முடிந்தது. இந்நிலையில் மதுரை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு குப்பை தொட்டிகளாக மாறிய சாலைகளாக பார்க்க முடிகிறது.  அதிக அளவுக்கான உணவு குப்பைகள் சாலைகளில் போட்டு செல்லப்படுவதால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 



 

மழை நீரோடு கலந்த பட்டாசு குப்பைகள்


 

மதுரையில் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் இரவு முழுவதிலும் பட்டாசுகளை வெடித்து பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதனால் மதுரை மாநகராட்சி பகுதி முழுவதிலும் பட்டாசு குப்பைகள் மழை நீரோடு சேர்ந்து இருப்பதால் பட்டாசு குப்பைகளை அகற்றுவதில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மதுரை மாநகர பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்த நிலையில் மழை நீரோடு சேர்ந்து பட்டாசு குப்பைகளும் தேங்கி இருப்பதால் பட்டாசு குப்பைகளை அகற்றுவதில் தூய்மை பணியாளர்களுக்கு கடும் சிரமடைந்துள்ளது. பட்டாசு குப்பைகளை சாலைகளில் ஒட்டிக் கொள்வதால் சுரண்டி எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்டாசு குப்பைகளோடு சேர்ந்து கம்பி மத்தாப்புகள் உள்ளிட்ட கம்பிகளும் குப்பைகளோடு கிடப்பதால் அதனை அகற்றுவதின்போது தூய்மை பணியாளர்களுக்கு காயம் ஏற்படும் நிலையடைந்தது.

 

டன் கணக்கில் குப்பைகள் அகற்றம்


 

மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவிற்கான உணவு குப்பைகள் தேங்கிய நிலையில் குப்பை தொட்டிகள் நிரம்பி சாலைகள் முழுவதிலும் குப்பை மேடாக மாறியுள்ளது. மழைநீர் கழிவுநீர் குப்பை என தேங்கி பல்வேறு பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மழை நீரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதில் தூய்மை பணியாளர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதுபோன்று திருவிழா காலங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. காலை முதலாக டன் கணக்கில் குப்பைகளை அகற்றி வரும் தூய்மை பணியாளர்கள்.