ChennaI Air Polluton: தீபாவளியன்று பட்டாசு வெடித்தால், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் காற்று மாசு அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.
சென்னையில் காற்றின் தரம் மோசம்:
காற்றின் தரம் குறைந்துள்ளதால், சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வட்டார தகவல்களின்படி, சென்னையின் மூன்று பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு (AQI) மோசமடைந்துள்ளது. அதன்படி மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210 மற்றும் பெருங்குடியில் 201 ஐ எட்டியுள்ளது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 201-300 க்கு இடைப்பட்ட, காற்றின் தரக்குறியீட்டை "மோசம்" என்று வகைப்படுத்துகிறது, இது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்; 301-400 க்கு இடைப்பட்ட நிலைகள் "மிகவும் மோசமானவை" என வகைப்படுத்தப்படுகின்றன, அதே சமயம் 401-500 க்கு இடைப்பட்ட நிலைகள் கடுமையானதாகக் கருதப்படுகின்றன. மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை:
சென்னையில் தற்போது காற்றின் தரக்குறியீடு 200-ஐ கடந்துள்ளதால், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். விடிந்தபிறகும் கூட பட்டாசில் இருந்து வெளியான நுண்துகள்கள் பனியுடன் சேர்ந்து சென்னை வான்பரப்பில் மிதந்தபடி காணப்படுகிறது. ஏற்கனவே காற்று மாசுபாட்டை தவிர்க்க, காலையில் ஒரு மணி நேரம் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் என, தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், நேரக்கட்டுப்பாட்டை மீறி பலரும் பட்டாசுகளை வெடித்ததால், சென்னையில் காற்று மாசுபாடு நிலவுகிறது.
சென்னை மட்டுமின்றி கொல்கத்தா, மும்பை, ஜெய்பூர் போன்ற பல்வேறு பிரதான நகரங்களிலும், தீபாவளி கொண்டாட்டத்தால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
டெல்லியின் விஷமான காற்று:
தீபாவளி கொண்டாட்டத்தால் நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் காற்று மாசுக்கு பஞ்சமில்லை. அதாவது தீபாவளியையொட்டி காற்றின் தரம் பன்மடங்கு குறைந்துள்ளது. டெல்லியில் காலை விடிந்ததும் எங்கும் மாசு மூட்டம் மட்டுமே தெரிகிறது. சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சூழல் மிகமோசமாக உள்ளது. டெல்லி-என்.சி.ஆரில் காற்று ‘கடுமையான’ நிலையை எட்டியுள்ளது. பல இடங்களில் AQI 350ஐ தாண்டியுள்ளது.
இந்த முறையும் தலைநகர் டெல்லியில், தீபாவளியன்று பட்டாசு வெடிக்க அரசு தடை விதித்திருந்தது, இதையும் மீறி, டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. வியாழனன்று மாலை நேரம் தொடங்கியதும் மக்கள் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்தனர். டெல்லி பகுதியிலும் மக்கள் பட்டாசு வெடித்தனர். இதன் காரணமாக, டெல்லி-என்சிஆர் பகுதியில் காற்று 'கடுமையான' அளவை எட்டியது. ஆனந்த் விஹார் மற்றும் சரிதா விஹாரில் AQI அளவு 300ஐ தாண்டியுள்ளது.