சென்னையில் இருந்து 170 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் ஆந்திரா அருகே கரையை கடக்கிறது. இதனால், சென்னையில் படிப்படியாக மழை குறையும். ஏற்கனவே, புயலின் கண் பகுதி கடக்க ஆரம்பித்துவிட்டது. ஆந்திராவில் கரையை கடக்க உள்ளதால் அங்குள்ள கடற்கரையோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த மாநிலத்தில் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தரப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் தரப்பட்டுள்ளது.


புரட்டிப்போட்ட மிக்ஜாம்:


வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை சென்னையில் தொடர்ந்து மழை பெய்தது.


இதன் காரணமாக, சென்னை முழுவதும் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. முக்கிய சாலைகள் அனைத்திலும் தண்ணீர் ஆறு போல ஓடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதித்தது. இந்த நிலையில், இந்த நிலையில், சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் தற்போது சென்னைக்கு 170 கி.மீ.க்கு தொலைவில் நகர்ந்து சென்றுள்ளது.


இன்று மதியம் கரையை கடக்கும்:


தற்போது மிக்ஜாம் புயல் வடகிழக்கு காவாலியின் 40 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு 80 கி.மீ. தொலைவிலும், பாபட்லாவில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு 140 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த மிக்ஜாம் புயல் ஆந்திராவில் இன்று முற்பகல் கரையை கடக்கும் என்பதால் ஆந்திராவில் பெருமழை பெய்து வருகிறது.


தற்போதைய நிலவரப்படி, பாபட்லாவில் 21 செ.மீட்டரும், நெல்லூரில் 20 செ.மீட்டரும், மசூலிப்பட்டினத்தில் 14 செ.மீட்டரும், காவாலியில் 14 செ.மீட்டரும், ஆங்கோலேவில் 11 செ.மீட்டரும், காகிநாடா, நர்சாபூரில் தலா 5 செ,மீட்டரும், பொடாலகூரில் 20 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.


ஆந்திராவில் பெருமழை:


ஆந்திராவில் மோசமான மழை பெய்து வருவதாலும், இன்னும் சற்று நேரத்தில் அங்கு புயல் கரையை கடக்க இருப்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புயல் தொடர்பாக கேட்டறிந்தார். ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் அனைத்திற்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கோதாவரி, கோனசீமா, நெல்லூர், பிரகாசம், கிருஷ்ணா, பாபட்லா, குண்டூர், திருப்பதி, சித்தூர், அன்னமயா, கடப்பாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


எலுரு, கிழக்கு கோதாவரி, காகிநாடா, பால்நாடு, என்.டி.ஆர்., ஸ்ரீசத்யசாய் மற்றும் நான்டியால், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: CM Stalin On michaung: சென்னையில் மழைநீர் வடியாததற்கு இதுதான் காரணம், இது என்ன வெள்ளம்? - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்


மேலும் படிக்க: CM MK Stalin: கனமழையால் கலங்கிய சென்னை மக்கள்.. துயர் துடைக்க களத்தில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..