களத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்:


சென்னை நேரு ஸ்டேடியம் பின்புறமுள்ள  கண்ணப்பர் திடலில் உள்ள நிவாரண முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர், அவர்களுக்கு முகாம்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை தேவைகள் பற்றியும் கேட்டறிந்தார். 


மழைநீர் ஏன் வடியவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்:


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “மிக்ஜாம் புயலால் பெய்த மழையானது கடந்த 2015ம் ஆண்டு பெய்த மழையை காட்டிலும் மிக மிக மிக அதிகம். புயல் வேகமாக நகராமல் மெதுவாக நகர்ந்ததாலே, சென்னையில் வரலாறு காணாத பெருமழை கொட்டியுள்ளது. இருப்பினும் அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவே பெருமளவிலான பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  9 மாவட்டங்களில் 61 666 நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன. 11 லட்சம் உணவு பொட்டலங்கள், 1 லட்சம் பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால்கள் நல்ல முறையில் பணியாற்றினாலும், வெள்ள நீர் கடலில் கலக்கும் பகுதிகளான அடையாறு மற்றும் கூவம் முகத்துவாரங்களில் புயலின் காரணமாக அலைகளின் அளவு அதிகமாக இருந்ததால் நீர் மெதுவாக வடிந்தது. இருந்தாலும் அரசு மேற்கொண்ட பல்வேறு வெள்ள நிவாரண நடவடிக்கைகளால் பெருமழையின் தாக்கமும் முன்பை விட குறைவாக உள்ளது. தண்ணீரும் விரைவாக வடிந்துகொண்டுள்ளது. 


முன்னெச்சரிக்கை நடவடிக்கை விவரங்கள்:


2015ம் ஆண்டு திட்டமிடாமல் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் செயற்கையான வெள்ளம் ஏற்பட்டது. ஆனால், இப்போது ஏற்பட்டு இருப்பது இயற்கை வெள்ளம். அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த 4 நாட்களில், முன்கூட்டியே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்த நீர் திறக்கப்பட்டதால் தான் இந்த சூழல் சமாளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 8000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டதால், இதனால் மழைநீர் வெள்ளம் அடையாறு நதியில் சீராக கலந்தது. இத்தகைய பெரும் இயற்கை சீற்றங்களால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினாலும், ஒரு அரசினுடைய உண்மையான கடமை என்பது இன்னல்களின் தாக்கத்தை குறைப்பதோடு, மக்களை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தான். தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சிகளில் இருந்தும், தூய்மைப் பணியாளர்கள் சென்னை வந்துள்ளனர். இயல்பு நிலை திரும்புவதற்கான அனைத்து பண்களும் துரிதமாக நடைபெற்று வருகின்றனர்.


ரூ. 4000 கோடி வீணா?


14 அமைச்சர்கள் களத்தில் இருக்க வார்டு உறுப்பினர்கள் தொடங்கி எம்.எல்.ஏக்கள் வரை அனைவரும் தங்களது பகுதியில் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 4000 ரூபாய் கோடிக்கு பணிகள் செய்தும் சென்னை மிதக்கிறது என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர். 4000 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்ததால் தான், இவ்வளவு பெரிய வரலாறு காணாத, 47 வருடங்களில் இல்லாத அளவிலான மழை பெய்தும் சென்னை தப்பித்து உள்ளது. 4000 கோடி ரூபாய்க்கு திட்டமிட்டு செலவு செய்து பணிகள் நிறைவேற்றப்பட்டதால் தான் சென்னை உடனடியாக மீண்டு வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் செய்யாததை, திமுக ஆட்சி காலத்தில் 2 ஆண்டுகளில் இந்த பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மிஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க, 5000 கோடி ரூபாயை உடனடியாக  விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம். இதுதொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திலும் கோரிக்கை வைப்பார்கள்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.