மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண முகாம்களில் ஆய்வு மேற்கொண்டார்.


தாண்டவமாடிய மிக்ஜாம் புயல் 


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி இரவு தொடங்கி நேற்று (டிசம்பர் 4) இரவு வரை இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. இது 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது பெய்த மழையை விட அதிக அளவாகும் .


இந்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் மாநகரின் செயல்பாடு என்பதே பெரும்பாலும் ஸ்தம்பித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக பேருந்து, புறநகர் ரயில் சேவை, விமான சேவை, விரைவு ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்து விட்ட நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அனைத்து இடங்களிலும்  படிப்படியாக மின்சார விநியோகம் தொடங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே கனமழை தொடர்பான பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொலைபேசி வாயிலாக தகவல்களை கேட்டு நடவடிக்கை எடுத்து வந்தார். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் களத்துக்கு 14 அமைச்சர்களை அனுப்பி நிவாரணப்பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.


கரம்கூப்பி அழைத்த முதலமைச்சர்


அதில், “அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, '#CycloneMichaung' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது. முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம்/ தடுத்திருக்கிறோம்.


மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. இன்னலி்ல் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம். இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்! அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன். வெல்லட்டும் மானுடம்!” என தெரிவித்திருந்தார். 


களத்தில் இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் 


இந்நிலையில் சென்னை நேரு ஸ்டேடியம் பின்புறமுள்ள  கண்ணப்பர் திடலில் உள்ள நிவாரண முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர், அவர்களுக்கு முகாம்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை தேவைகள் பற்றியும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.