மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழை நின்றது. இதனால் அங்காங்கே தேங்கியுள்ள வெள்ள நீர் வடிய தொடங்கியுள்ளது. 


மிக்ஜாம் புயல்:


மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழையால் வெள்ளக்காடான சென்னை மக்களுக்கு உதவுவதற்காகவும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் பகுதிவாரியாக  அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்நிலையில் மேலும், 7 அமைச்சர்களை முதல்வர் நியமித்துள்ளார்.


இந்த நிலையில் சென்னை தாம்பரம், ஆவடி, ஆகிய மாநகராட்சிகளுக்கு முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்கு என கூடுதலால அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதனிடையே, மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடாது மழை  பெய்து வருகிறது. முன்னதாக, சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார். 


இது தொடர்பாக வீடியோ பதிவு வெளியிட்ட அவர், “மிக்ஜாம் தீவிர புயல் தற்பொழுது சென்னைக்கு வட கிழக்கில் 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து வட திசையில் நகர்ந்து செல்லக்கூடும். அடுத்து வருகின்ற 6 மணி நேரத்திற்கு மழை படிப்படியாக குறையும்” என்று கூறியிருந்தார். 


பல்வேறு இடங்களில் மழை இல்லை:


இந்நிலையில், நேற்று (டிசம்பர் 4) இரவு 10 மணிக்கு சென்னையை பொறுத்தவரை பல்வேறு இடங்களில் மழை இல்லை. மேலும் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருவதால் மீட்புப் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் துரிதப்படுத்தியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த மழையால் நகரின் பல இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.  இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளையும் பல்வேறு தரப்பினரும் செய்து வருகின்றனர். 


இதனால் கடந்த 24 மணி நேரத்தில் பெரும் துன்பத்திற்கு ஆளான மக்கள் மழை நின்றுபோனதால் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.  பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது நிலையில் தண்ணீர் குறைந்துள்ள பகுதிகளில் மின் விநியோகம் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதநேரம், வெள்ளநீர் வடிய தொடங்கி விட்ட நிலையில் பொதுமக்கள் இன்று தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்று தொடர்ந்து தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும் பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. 


முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முகாம் அலுவலகத்திலிருந்து அமைச்சர்கள், பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் நா.எழிலன், இ.கருணாநிதி, இ.பரந்தாமன்,  எஸ்.அரவிந்த் ரமேஷ் மற்றும் திரு.வி.க.நகர் கண்காணிப்பு அலுவலர் கணேசன் ஆகியோரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.