திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை உடனே நிறைவேற்றிட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வடகிழக்குப் பருவமழையையொட்டி முன்கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நான் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன். அமைச்சர் பெருமக்களும் இதுபோன்ற நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து கழக நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி - மக்களின் இன்னல்களைப் போக்கிட தீவிரமாகச் செயல்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு அணைகளிலும், ஏரிகளிலும் நீர் இருப்பு 50 சதவீதத்திற்கும் மேலாக பல இடங்களில் இருப்பதால், பெய்து வரும் மழையுடன் கூடுதல் நீர் சேர்ந்து அவைகள் மற்றும் ஏரிகளின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை எரிகள் மற்றும் கரையோரங்களையும் கண்காணித்து பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசுத் துறைகள் செயல்பட வேண்டுமென கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்