நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்கவேண்டும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் விலக்கு பெறுவோம் என்றோம். அதில் உறுதியாகவும் உள்ளோம். ஏ.கே.ராஜன் குழு அளிக்கும் அறிக்கையை வைத்த சட்ட நடவடிக்கை எடுப்போம். நீட் தேர்வை ரத்து செய்வோம்; அதற்கான நம்பிக்கை உள்ளது. திமுக ஆட்சி இருந்த காலத்தில் விரும்புகின்ற மாநிலம் நீட் தேர்வை ஏற்கலாம் என சொன்னார்கள். ஆனால், அப்போது திமுக எதிர்த்தது. பிரதமரை சந்தித்தபோது பல கோரிக்கைகள் வைத்தாலும், நீட் தேர்வு விவகாரம் குறித்து நான்கு, ஐந்து முறை வலியுறுத்தினேன். நீட் தேர்வை ஆரம்ப காலத்தில் இருந்து எதிர்த்து வருவது திமுகதான். 2010இல் இருந்து விரும்புகின்ற மாநிலங்கள் மட்டும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்ற நிலைமை இருந்தது. தற்போது அனைத்து மாநிலங்களும் நீட் கட்டாயம் என நிலை உருவாகியுள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்க வேண்டும்” என்று பேசினார்.


இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு நாங்கள் துணை நிற்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Petrol Diesel | நிதிநிலை சீரான பின்னரே பெட்ரோல் விலை குறைக்கப்படும் - நிதியமைச்சர் அறிவிப்பு


முன்னதாக, நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் பெரும்பாலானோர் கருத்தாக இருப்பதாக முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளை தமிழ்நாடு அரசு அமைத்த முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. அது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த 21ஆம் தேதி நிகழ்ந்தது. அதில் பேசிய ஏ.கே.ராஜன், “நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் பெரும்பாலானோர் கருத்தாக இருக்கிறது. வேண்டும் என வெகுசிலர் மட்டுமே கூறியுள்ளனர். நீட் தேர்வு பாதிப்புகள் தொடர்பான மேலும் சில கோப்புகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அவை கிடைத்தவுடன் தேர்வு குறித்த முடிவுகளை குழு அரசுக்குத் தெரிவிக்கும். அரசு கேட்டுள்ள விளக்கங்களுக்கு மட்டுமே குழு பதில் அளிக்கும்’ என அவர் கூறினார். இதுவரை 25000 கடிதங்கள் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வந்திருப்பதாக முன்னாள் நீதிபதி ராஜன் குறிப்பிட்டார். 




நீட் தேர்வு தொடர்பான கருத்துக் கேட்புக்காக வெளியிடப்பட்ட நாளிதழ் விளம்பரத்தில், "தமிழ்நாடு அரசால் நீட் தேர்வின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்கள் தங்களின் கருத்துரைகளை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மருத்துவக் கல்வி இயக்குநகரத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப் பெட்டியில், வரும் 23.06.2021க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.


Tax | ''இரண்டு மடங்கு வரி கட்ட நேரிடும்'' - வருமான வரியின் புதிய விதியை தெரிந்துகொள்ளுங்கள்!