ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் உரை மீதான விவாதத்தில் பேசிய கலசப்பாக்கம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார். திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசு வரி குறைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் ஆளுநர் உரையில் அது குறித்த அறிவிப்பு இடம் பெறாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்
அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசின் வரி உயர்வு காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக குறிப்பிட்டார், தமிழகத்தின் நிதிநிலைமை தற்போது சரியில்லை என்றும், எப்போது சரியாகிறதோ அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தது போல பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைப்போம் எனவும் பதிலளித்தார்.தமிழகத்தில் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் ஒரு சதவீத நிதியை செலவிட்டு வருவதாக குறிப்பிட்ட நிதியமைச்சர். கொரோனா ஊரடங்கு கால கட்டத்திலும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தமிழக அரசின் சார்பில் இரண்டு தவணைகளாக 2000 ரூபாய் வழங்கி இருப்பதை கூறினார். கடந்த 2014-ஆம் ஆண்டில் செஸ் வரி 9 ரூபாயாக இருந்த போது அப்போது இருந்த அதிமுக அரசு, மாநில அரசு வரியை 28 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தி இருந்ததாகவும், ஆனால் 2006-ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தபோதும், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை 3 முறை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி குறைத்ததாகவும் தெரிவித்தார்.
இதே போல் சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் டிஎன்பிஎஸ்சி மற்றும் மத்திய அரசுப்பணிகளுக்கான தேர்வுகளில் தமிழே தெரியாத வெளிமாநிலத்தவர் திட்டமிட்டு பணியமர்த்தப்படுவதாக பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பதிலளித்திருந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 10 ஆண்டுகளில் வெளிமாநிலத்தவரை தமிழகத்தில் உள்ள அரசுப்பணியிடங்களில் பணியமர்த்துவதற்காக மாற்றப்பட்ட அரசாணைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், எதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ளவர்களை புறக்கணித்துவிட்டு வெளி மாநிலத்தவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை ஆராய்ந்து அதுபோன்ற செயல்பாடுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்திருந்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது