நிதிச்சட்டம் 2021 ன் படி , ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து, வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு அதிக வருமான வரி பிடித்தம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருமான வரி செலுத்தாவர்கள் உடனடியாக செலுத்தாவிடில் வருமான வரிப்பிடித்தம் இரு மடங்காக உயரக்கூடும்.
வருமான வரி ( Income tx) என்பது தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் ஈட்டும் வருமானத்திற்கு அரசாங்கத்தின் மூலம் விதிக்கப்படும் வரியாகும். ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் வருமான வரி தாக்கல் செய்யப்படும். இதிலிருந்து பெறப்படும் வரியினைக்கொண்டு அரசாங்க கடமைகளை செலுத்தவும், பொது சேவைகளுக்கு நிதியளிக்கவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக வருமான வரித்தாக்கல் செய்வது என்பது மக்களின் கடமைகளில் ஒன்றாக உள்ளது
2019-2020 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 31 என அரசு அறிவித்திருந்த நிலையில் தான் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்களின் வசதிக்காக வருமான வரித்தாக்கல் செய்யும் கால அவகாசத்தினை இரு முறை மாற்றி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மே 31 என இருந்த நிலையில் தான் தற்போது ஜூன் 30 கடைசி தேதி என அறிவித்துள்ளது. மேலும் புதிய தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி வருமான வரித்தாக்கல் செய்வோருக்கு வசதியாக www.incometax.gov.in என்ற இ-பதிவு முறையினை மேற்கொள்ளவும் அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில் தான் ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து நிதிச்சட்டம் 2021 ன் படி, வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு அதிக வருமான வரி பிடித்தம் பொருந்தும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த பட்ஜெட்டின் போது வருமான வரி சட்டத்தில் 206 ஏ.பி மற்றும் 206 சி.சி.ஏ ஆகிய 2 பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டன. இதன் படி ஒவ்வொரு ஆண்டும் வருமான வரியில் கழிக்கப்படும் வருமான வரி பிடித்தம் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அவர் கண்டிப்பாக வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஜூலை 1 ஆம் தேதி முதல் கட்டணம் இரு மடங்காகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நிதிச்சட்டம் யாருக்கு எல்லாம் பொருந்தாது?
ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ள புதிய நிதிச்சட்டம் 2021 என்பது அனைவருக்கும் பொருந்தாது எனவும், பலருக்கு இதில் விதி விலக்குகள் உள்ளது என tax2win ன் நிர்வாக இயக்குநர் அபிசேக் சோனி தெரிவித்துள்ளார். அதன்படி,
இதற்கு முந்தைய ஒவ்வொரு நிதியாண்டிலும் மொத்த வருமான வரி பிடித்தம் ( TDS) ரூ. 50 ஆயிரத்திற்கு குறைவாக இருந்தால் அல்லது 2 ஆண்டுகளாக உங்களது வருமான வரியினை தவறாமல் தாக்கல் செய்பவர்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது.
மாத வருமானம் (192), லாட்டரி (194 பி), 4 Horse race(194 பிபி), பிஎஃப் (192 ஏ), trust income (194 எல்பிசி), மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் (194 என்) ஆகியவற்றில் வருமான வரிப்பிடித்தம் கழிக்கப்பட வேண்டும் என்றால் இந்த புதிய நிதிச்சட்டம் 2021 பொருந்தாது. மேலும் நிரந்தர ஸ்தாபனம் இல்லாத வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) இந்த விதிகள் பொருந்தாது எனவும் கூறியுள்ளார்.