மாநிலத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் ஊரக  உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க கூடுதல் அவகாசம் கேட்கப்படும் என தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தெரிவித்தது. நகர்ப்புற அமைப்புகளுக்கான  தனி அலுவலர் பதிவிக்காலம் நீட்டிப்பு தொடர்பான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்ட போது, அரசு இவ்வாறு தெரிவித்தது.  முன்னதாக, தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் செப்.15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடித்து, முடிவுகளை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 



2019 உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்:   


தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள்  தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர் புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, தூத்துக்குடி திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் விருதுநக ஆகிய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக 2019 டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.


ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 91,975 பதவியிடங்களை நிரப்பிட நேரடித் தேர்தல் பெற்றது. இதில், 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியிடங்களும், 9,624 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களும் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும்.


9 மாவட்டங்களுக்கு தேர்தல் ஒத்திவைப்பு:  


விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் இந்த 9 மாவட்டங்களில் இருக்கும் ஊரக பகுதிகளில் வார்டு மறுவரை முடியாததால் இந்த மாவட்டங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 


உள்ளாட்சி, ஊரகப்பகுதி சாலைகளை புதுப்பிக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!


இந்நிலையில், தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்த நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டதால், தேர்தல் அறிவிப்பு தொடங்கி, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் அறிவிப்பு என அனைத்துமே செப்டம்பர் 15க்குள் முடிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடுபிடி விதித்தது.



செப்.15-க்குள் உள்ளாட்சித் தேர்தல்- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


தனிஅலுவலர் நியமனம்:   


இதற்கிடையே, தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட தனிஅலுவலர் பதிவிக் காலம் வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தனி அலுவலர் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான சட்ட வரைவு மசோதாவை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தாக்கல் செய்தனர். அப்போது பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், " புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக  உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கேட்கப்படும்" என்று தெரிவித்தார்.