17ம் நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர்கள் கட்டிய கோட்டையானது, தற்போது தமிழ்நாட்டின் தலைமைச் செயலமாக செயல்பட்டு வருகிறது.


ஆங்கிலேயர்களின் வருகை:


கி.பி. 1600 ஆண்டில் இந்தியா உள்ளிட்ட கிழக்கு திசை நாடுகளுடன் வணிகம் செய்வதற்கான அனுமதியை, இங்கிலாந்து ராணியிடம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி அனுமதி பெற்றது, கடல் வழியாக வந்தவர்கள், முதன் முதலாக குஜராத் மாநிலம் சூரத்திற்கு வந்தடைந்தனர். அப்போது, 1613 ஆம் ஆண்டு ஆட்சி புரிந்து கொண்டிருந்த முகலாய மன்னர் ஜஹாங்கீரிடம் வணிகம் செய்ய அனுமதி பெறுகின்றனர்.




பின்னர் படிப்படியாக, அவர்கள் வணிகத்தை ஆக்ரா, அகமதாபாத் உள்ளிட்ட இடங்களுக்கு விரிவுபடுத்தினர். அப்போது கிழக்கு நாடுகளான இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வணிகத்தை எளிமையாக மேற்கொள்ளவும், இந்தியாவுடன் வணிகத்தை இணைத்து கொள்ள ஏதுவாக, இந்தியாவின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் வணிக தளத்தை அமைக்க விரும்புகின்றனர்.


செயிண்ட் ஜார்ஜ் கோட்டை:


அதையடுத்து மதராஸ் பட்டினத்தை நிர்வாகித்த வேஙகடப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து, ஆங்கிலேயர்கள் குறிப்பிட்ட நிலத்தை வாங்குகியதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் ஆங்கிலேயர் பிரான்சிஸ் டே என்பவர் 1639-40 ல் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினார். புனித ஜார்ஜ் தினத்தன்று இக்கோட்டை கட்டப்பட்டதால், அப்பெயர் பெற்றதாகவும் , அப்போதைய காலத்தில் சுமார் 2 லட்சத்து 45 ஆயிரத்து 514 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.




இந்த கோட்டையானது, ஆங்கிலேயர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கும், அவர்களது பொருட்களை சேமித்து வைக்கவும் பயன்படுத்தி கொண்டனர். அதையடுத்து, இப்பகுதியைச் சுற்றி மக்கள் குடியேற ஆரம்பித்தனர். பின்னர்  இக்கோட்டையைச் சுற்றி கிராமங்கள் உருவாக ஆரம்பித்து சென்னை உருவானது என்றும் கூறப்படுகிறது.


இக்கோட்டைதான், தமிழ்நாட்டின் தற்போதைய தலைமைச் செயலமாகவும், சட்டப்பேரவை அலுவலகமாகவும் மற்றும அமைச்சர்களின் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. இக்கோட்டையில் முக்கிய மூன்று கட்டடங்கள் உள்ளன



  1. புனித மேரி கிறிஸ்தவ ஆலயம்

  2. கிளைவ் மாளிகை

  3. கோட்டை அருங்காட்சியகம்


புனித மேரி கிறிஸ்தவ ஆலயத்தில் தான், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னராக இருந்த ராபர்ட் கிளைவ்வின் திருமணம் நடைபெற்றது. கோட்டை அருங்காட்சியகத்தில், ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், ஆயுதங்கள், ஆடைகள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.




மேலும், இந்தியா சுதந்திரமடைந்த பின், கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி, இன்றும் பாதுகாப்பாக கண்ணாடி பெட்டிக்குள் பத்திரமாக மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது, செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் உள்ள அருங்காட்சியகத்துக்குள் சென்று, வரலாற்று சான்றுகளை பார்த்துவிட்டு வாருங்கள். 


75th Independence Day 2022: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வரலாறு தொடர்பான 75 சிறப்பு கட்டுரைகளை தொடர். இது தொடரின் 4வது கட்டுரை....


முதல் கட்டுரை: India 75: நெருங்கும் சுதந்திர தினம்.. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான காரணம் என்ன? தெரிந்துகொள்வோம்..


இரண்டாம் கட்டுரை: India 75: இந்தியாவுக்கான கடல்வழி பாதையை காற்றின் உதவியால் கண்டுபிடித்த போர்ச்சுக்கீசியர்கள்.. ஒரு தொகுப்பு..


மூன்றாம் கட்டுரை: India 75: சுதந்திரம் அடைந்த இந்தியாவை ஆட்சி செய்த போர்ச்சுகீசியர்களின் கதை தெரியுமா..?