இந்தியாவுக்கான கடல் வழிப்பாதையை கண்டுபிடிக்க சிரமப்பட்டு கொண்டிருந்த காலத்தில், இந்தியர்களின் உதவியால், போர்ச்சுக்கீசியர்கள் கடல் வழியை கண்டுபிடித்தனர்.


ஐரோப்பியர்களின் வருகை:


ஐரோப்பியர்களில், வாஸ்கோடகாமா தான் முதன் முதலாக இந்தியாவிற்கு வந்தார் என அறிந்திருப்போம், அப்படியென்றால், அதற்கு முன் ஐரோப்பியர்கள் யாரும் இந்தியாவுடன் வணிகம் செய்யவில்லையா. அப்படியன்றால், அது இல்லை என்பது தான் உண்மை, இதற்கு முன்பும் வணிகம் செய்து கொண்டு இருந்தார்கள். ஆனால நிலவழிப் பாதை வழியாக, அதாவது பட்டுப்பாதை வழியாக வணிக தொடர்பு கொண்டிருந்தனர்.




அதென்ன பட்டுப்பாதை, படத்தில் காட்டியுள்ளவாறு, இந்த வழித்தடத்தில் பட்டு வணிகம் மேற்கொள்ளப்பட்டதால், இப்பாதை பட்டுப்பாதை என அழைக்கப்படுகிறது. ஐரோப்பியர்கள், பட்டுப்பாதை வழியாக  இஸ்தான்புல்(துருக்கி), பெர்சியா( ஈரான்) வழியாக வணிக தொடர்பு கொண்டிருந்தனர். சரி நிலவழிப் பாதை இருக்கும் போது, ஏன் அவர்கள் கடல்வழியை தேர்ந்தெடுத்தனர்.


கடல் வழியை தேர்ந்தெடுக்க காரணம்:


15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஒட்டாமன் பேரரசு கான்ஸ்டாண்டின் நோபிள் பகுதியை கைப்பற்றியது. அதனால், இப்பாதை வழியாக வர்த்தகம் மேற்கொள்வதன் மூலம் பல்வேறு சிரமத்திற்கு ஐரோப்பியர்கள் உள்ளாகினர். ஐரோப்பியர்களின் பொருட்கள் சூறையாடப்பட்டன,  கான்ஸ்டாண்டின் நோபிளில் உள்ள மக்களிடம் வர்த்தகம் மேற்கொள்ளும் போது, அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதையடுத்து புதிய பாதையை கண்டுபிடிக்க சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.


சிவப்பு இந்தியர்கள்: RED INDIANS


ஐரோப்பிய மன்னர்கள் இந்தியா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை கண்டுபிடிப்பதற்காக, அந்நாட்டு மக்களை ஊக்கப்படுத்தினர். அதையடுத்து இத்தாலி நாட்டைச் சேர்ந்தவராக கருதப்படுகிற கொலம்பஸ், இந்தியாவை கண்டுபிடிக்கச் சென்று, அமெரிக்காவுக்கு சென்றடைந்து விடுகிறார். இப்படித்தான் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார்.




ஆனால் அமெரிக்காவை, இந்தியா என்றே நம்பிய கொலம்பஸ், அவர்களை எல்லாம், சிவப்பு இந்தியர்கள் என்று கருதுகிறார். இவர்தான் அமெரிக்காவை கண்டுபிடித்தாக சொல்லப்பட்டாலும், இல்லை என்ற வாதமும் வைக்கப்படுகிறது, ஏனென்றால் இதற்கு முன்பும் ஐரோப்பியர்கள் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கொலம்பஸின் பயணத்திற்குப் பின்பே, அமெரிக்காவில், ஐரோப்பியர்கள் குடியேற ஆரம்பித்தனர்.


சிறைக் கைதிகளின் கடல் பயணம்:


போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா, குற்றம் செய்தமைக்காக சிறை தண்டனை அனுபவித்து வந்தார். அவருடன் சில கைதிகள் மற்றும் சில மக்களை இந்தியாவை கண்டுபிடிக்குமாறு, அந்நாட்டு அரசாங்கம் அனுப்பி வைக்கிறது. பாய்மர கப்பலில் காற்றின் உதவியுடன் பயணித்து, 1498 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் தென் முனையான, நன்னம்பிக்கை முனையை அடைகின்றனர். பின் அங்கு, இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகரை சந்திக்கின்றனர், அவரின் உதவியால், கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் வந்தடைகின்றனர். ஒரு வழியாக இந்தியாவுக்கான கடல்வழியை கண்டுபிடித்துவிட்டனர்.


75th Independence Day 2022: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வரலாறு தொடர்பான 75 சிறப்பு கட்டுரைகளை தொடர். இது தொடரின் 2வது கட்டுரை....


முதல் கட்டுரை: India 75: நெருங்கும் சுதந்திர தினம்.. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான காரணம் என்ன? தெரிந்துகொள்வோம்..


அடுத்த பகுதி: இந்தியாவிற்கு வரிசையாக வந்தடையும் ஐரோப்பிய நாட்டினர்கள்; அதிகரிக்கும் வணிக போட்டிகள்..