இந்தியாவிற்கு வணிகம் செய்வதற்காக வந்த ஐரோப்பியர்களான போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர், டச்சு, டேனிஸ், பிரெஞ்சு ஆகியோர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நிலப்பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்ய ஆரம்பித்தனர்.


போர்ச்சுக்கீசியரை வரவேற்ற இந்திய மன்னர் :


 ஐரோப்பியர்களில், கடல் வழியாக இந்தியாவிற்கு முதலில் வந்தடைந்தவர், போர்ச்சுக்கீசிய நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமா தான். அவர் முதன் முதலாக மூன்று கப்பலுடன் கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு 1498 ஆம் ஆண்டு வந்தடைகிறார். அவரை மன்னர் சாமரின் வரவேற்று, வணிகம் செய்வதற்கு அனுமதி வழங்குகிறார்.




பின்னர் 3 மாதம் தங்கியிருந்த வாஸ்கோடகாமா குழுவினர், இந்தியாவிலிருந்து, 2 கப்பல்கள் நிறைய சரக்குகளை போர்ச்சுக்கு ஏற்றிச் செல்கின்றனர். பின்னர், போர்ச்சுக்கீசிய நாட்டில் இந்திய பொருட்களை அதிக விலைக்கு விற்கின்றனர். இதை கண்ட, மற்ற ஐரோப்பியர்களும் வணிகம் மேற்கொள்ள ஆசைப்பட்டு, பலரும் இந்தியா வர ஆரம்பிக்கின்றனர். அதையடுத்து, 16-ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்ப காலத்தில் கொச்சி, கண்ணனூர் உள்ளிட்ட இடங்களில் போர்ச்சுக்கீசியர் வணிக தளத்தை நிறுவுகின்றனர்..


காலவரிசைப்படி ஐரோப்பியர்களின் வருகை



  1. போர்ச்சுக்கீசியர் – கி.பி. 1498

  2. ஆங்கிலேயர் – கி.பி. 1601

  3. டச்சு- கி.பி 1602

  4. டேனிஸ்- கி.பி 1616

  5. பிரெஞ்சு- கி.பி.1664


வணிகர்கள் ஆட்சியாளர்களாக மாற்றம்:


இந்தியாவில் தடை ஏதுமின்றி எளிதாக வணிகம் செய்வதற்காக, கடற்கரையோரம் இடம் வேண்டும் என நினைத்த போர்ச்சுக்கீசியர், 1530 ஆம் ஆண்டு கோவாவை ஆட்சி செய்த பிஜப்பூர் மன்னரை தோற்கடித்து, அப்பகுதியை கைப்பற்றுகின்றனர். அதையடுத்து கோவாவை தலைமையிடமாக அமைத்துக் கொள்கின்றனர். இப்படித்தான் வணிகர்களாக வந்த போர்ச்சுகீசியர் ஆட்சியாளர்களாக மாறுகின்றனர்.


சென்னை சாந்தோம் ஆலயம்:


பின்னர், சென்னை மயிலாப்பூர் பகுதியில் போர்ச்சுக்கீசியரின், குடியிருப்புகள் அதிகமாகின. அதைத் தொடர்ந்து கி.பி. 1522 – 23 ஆம் ஆண்டில் சென்னையில் சாந்தோம் ஆலயத்தை கட்டினர். இன்றும், கிறிஸ்தவ மக்களின் வழிபாட்டு தலமாகவும், புகழ்பெற்ற கிறிஸ்தவ தலமாகவும் இருப்பதை காணலாம்.




17ம் நூற்றாண்டுகளில், பிற ஐரோப்பியர்களின் வருகையால், அவர்களுடன் வணிக போட்டியிட முடியாமல், கோவா, டையூ, டாமன் பகுதிகளை தவிர பிற இடங்களை போர்ச்சுக்கல் இழக்கின்றனர்.


பின்னர் வந்த டேனிஸ், டச்சு ஆகியோர் இந்தியாவில் சில காலங்கள் வர்த்தக தளத்தை ஏற்படுத்தி வணிகத்தை மேற்கொண்டனர். இருப்பினும் ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுகளின் ஆதிக்கத்தை தாக்குபிடிக்காமல் சென்றுவிட்டனர்.


சுதந்திரமடைந்த இந்தியாவில் ஆட்சி:


இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆங்கிலேயர்களிடமிருந்து 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்தும், போர்ச்சுக்கீசியரிடம்  இருந்து சுதந்திரம் பெறவில்லை. பலருக்கும் இது ஆச்சரியமாக இருக்கலாம். ஆம் உண்மைதான், 1961 ஆம் ஆண்டு வரை கோவா டையூ, டாமன் பகுதிகளிலிருந்து போர்ச்சுக்கீசியர் வெளியேறாமல் இருந்தனர்.




அதன் பின்னர் தான் நேரு பிரதமராக இருந்த காலத்தில் ராணுவத்தின் மூலம் போரிட்டு விரட்டியடிக்கப்பட்டனர். இந்த நிகழ்வுதான் ஆபரேஷன் விஜய் என அழைக்கப்படுகிறது. இதலில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்தியாவிற்கு முதலில் வந்தவர்களும் போர்ச்சுக்கீசியர்களே, கடைசியாக சென்றவர்களும் போர்ச்சுக்கீசியர்களேயாவர்…..


75th Independence Day 2022: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வரலாறு தொடர்பான 75 சிறப்பு கட்டுரைகளை தொடர். இது தொடரின் 3வது கட்டுரை....


முதல் கட்டுரை: India 75: நெருங்கும் சுதந்திர தினம்.. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான காரணம் என்ன? தெரிந்துகொள்வோம்..


இரண்டாம் கட்டுரை: India 75: இந்தியாவுக்கான கடல்வழி பாதையை காற்றின் உதவியால் கண்டுபிடித்த போர்ச்சுக்கீசியர்கள்.. ஒரு தொகுப்பு..


அடுத்த பகுதி: தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தை கட்டும் ஆங்கிலேயர்கள்