காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்ததும் அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கும் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் சென்னை புறநகர் பகுதியில் அதீத தொழில் வளர்ச்சி காரணமாக சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை ஏற்பட்டது. இதனையடுத்து அரசு விமான நிலையம் அமைக்க முடிவு செய்தது.
விமான நிலையம் எங்கு அமைய போகிறது என தகவல் வெளியாகி உள்ள நிலையில், கடந்து வந்த பாதையை கொஞ்சம் டைம் டிராவல் செய்து பார்க்கலாம்.
1998 ஏப்ரல் மாதம் மத்திய விமான துறை அமைச்சர் ஆனந்தகுமார் சென்னைக்கு இரண்டாவது ஏர்போர்ட் தேவைப்படுகிறது என முன்மொழிந்தார்.
1998 அக்டோபர் மாதம் சென்னை இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக முதல் உயர்மட்ட குழு கூட்டமானது நடைபெற்றது. இதில் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
1998 அக்டோபர் மாதம் அப்பொழுதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய்க்கு, சென்னை இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக பணிகளை முன்மொழிவுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
1998 அக்டோபர் மாதம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி துறை ஆணையம் , சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தெற்கு பகுதில் 10 கிலோமீட்டர் தூரத்தில் இடம் ஒன்றை தேர்வு செய்தனர்.
1999 நவம்பர் மாதம் 2000 கோடி செலவில் புதிய சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2000 நவம்பர் மாதம் போரூர் அருகில் மேற்கு மீனம்பாக்கத்தில் 3000 ஏக்கரில் , அமைய உள்ளதாக தகவல் வெளியானது.
2005 ஏப்ரல் மாதம் சென்னை விமான நிலையத்தில் வடக்கே, சுமார் 1457 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது .
2007 மே மாதம் அப்பொழுதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி ,காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 4820 ஏக்கர் பரப்பளவில், பசுமை விமானம் நிலையம் அமைக்க முடிவு செய்தார்.
2012 மார்ச் மாதம் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு சுமார் 20 ஆயிரம் கோடி ஆகும் என தமிழ்நாடு அரசு திட்டம் தீட்டியது.
2022 ஜனவரி மாதம் தமிழ் நாட்டில் 4 இடங்கள் தேர்வு செய்தனர். படாளம், திருப்போரூர் , பன்ணுர் ,பரந்தூர் ஆகிய இடங்களை தேர்வு செய்தனர்.
2022 மார்ச் மாதம் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
2022 ஆகஸ்ட் மாதம் சென்னை அருகே ஶ்ரீபெரும்புதூர் அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என்று ராஜ்யசபாவில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்