ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி உள்ள 7 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிகை நடைபெறும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 74.79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த தேர்தலில், இத்தொகுதியில் 69.58% வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். இதனால் மாலை 6 மணிக்கு மேலும் டோக்கன் வைத்திருந்த மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவுக்கு பின் ஈ.வி.எம் இயந்திரம், விவி பேட், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை அனைத்தும் முறையாக சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட அனைத்தும் சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டது. 238 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து இயந்திரங்களும் பத்திரமாக காப்பு அறையில் வைக்கப்பட்டது. காப்பு அறையை சுற்றி உள்ள சிசிடிவி கேமிராக்கள் முறையாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்த பின் அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க தொடர்ந்து சிசிடிவி கேமிராக்கள் மூலமும் பாதுகாப்பு படையினராலும் கண்காணிக்கப்பட்டு வந்தது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. துணை ராணூவப்படையினர், ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் சித்தோடில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எலவுமலை, சுண்ணாம்பு ஓடை, சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 7 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,வான தென்னரசுவும், தேமுதிக சார்பில் ஆனந்தும், நாம் தமிழர் சார்பில் மேனகாவும் போட்டியிட்டனர். மொத்தம் சுயேட்சை வேட்பாளர்களை சேர்த்து 77 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களம் கண்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறியப்பட்ட 34 மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மட்டுமல்லாமல், நாகாலாந்து, மேகலயா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களின் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று தொடங்கி நடைப்பெற்று வருகிறது.