Erode East By Election Result 2023: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் இம்முறையும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. 


அன்றைய தினம் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.ராஜாஜி புரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மட்டும் வாக்குப்பதிவு மையத்தில் மட்டும் இரவு 9.30 மணி வரை நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருந்தது. 


இந்தநிலையில், இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, மாலை முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.


இந்த வாக்கு எண்ணிக்கையானது 16 மேஜைகளில் 15 சுற்றுகள் வரை எண்ணப்படுகிறது. தரைத்தளத்தில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் 6 மேஜைகள் என அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு மேஜைகளிலும் 2 அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியினை மேற்கொள்ள இருக்கின்றன. ஒவ்வொரு மேஜையிலும் 77 வேட்பாளர்களின் முகவர்களும் இருப்பார்கள், இதனால் வேட்பாளர்களின் முகவர்களே ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இருப்பார்கள். 


இந்த வாக்கு எண்ணிக்கையின்போது தொண்டர்கள் அதிகளவில் குவிய வாய்ப்புள்ளதால், போலீஸ் பாதுகாப்பும் அதிகளவில் போடப்பட்டுள்ளது.  


தபால் ஓட்டுகள்: 


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் முதலில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட இருக்கிறது. அதனை தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று முடிவுகளில் பதிவான வாக்கு விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது. 


யார் யார் களத்தில்..? 


திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால் கூட்டணி நலன், எதிர்கால மக்கள் நலன் கருதி அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விலகியது. அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டநிலையில், அமமுக சிவபிரசாத் வாபஸ் பெற்றார். 


காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, அமமுக மற்றும் சுயெட்சை என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


பாதுகாப்பு:


இதற்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐஆர்டிடி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பு அறை, வாக்கு எண்ணிக்கை அறைகளை சுற்றி துணை ராணுவப்படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்புப்படை துப்பாக்கி ஏந்திய காவல்துறை மற்றும் ஈரோடு மாவட்ட காவல்துறை என அடுக்கடுக்கான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.