TN Fishermen Arrest: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 4 பேரை  இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.


தமிழக மீனவர்கள் 4 பேர் கைது:


ராமநாதபுரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 4 மீனவர்களை கடற்படை கைது செய்துள்ளது. ஒரு படகுடன்  4 மீனவர்களையும் சிறைபிடித்து  இலங்கையில் உள்ள கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து அண்மையில் தான் தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல துவங்கினர். இந்நிலையில் மீண்டும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை தொடங்கி இருப்பது, மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதையும் படியுங்கள்: Breaking News LIVE: விவசாயிகளுக்கு ரூ.2000 நிதி இன்று விடுவிப்பு - வாரணாசியில் வழங்குகிறார் பிரதமர்


தொடரும் மீனவர் கைது நடவடிக்கை:


தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, பன்னெடுங்காலமாகவே தொடர்ந்து வருகிறது. அந்த வகைய்ல் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்தும் நூறுக்கும் அதிகமான தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 



  • கடந்த மார்ச் 20ம் தேதி நெடுந்தீவு அருகே 25 மீனவர்களையும், மன்னார் அருகே 7 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

  • கடந்த மார்ச் 13ம் தேதி காரைக்காலைச் சேர்ந்த 15 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்

  • மார்ச் மாதம் 10ம் தேதி 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

  • பிப்ரவரி மாதம் 21ம் தேதி இலங்கைக்கு பீடி இலை கடத்தியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த  ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

  • பிப்ரவரி 4ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை கைது செய்து 2 விசைப்படகுகளையும்  இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணக்குப் பிறகு 20 பேர் விடுவிக்கப்பட்டு 3 பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.

  • கடந்த ஜனவரி 6ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது

  • புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த ஜனவரி 13-ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. 

  • கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

  • 2023 ஆம் ஆண்டில், இலங்கைக் கடற்படையினர் 243 மீனவர்களை கைது செய்துள்ளதுடன், 37 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


கைது செய்யப்பட்ட மீனவர்களும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் விடுவிக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த கோரிக்கையை வைப்பதோடு, தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி வருகின்றனர்.