தஞ்சாவூர்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகத்திலும் இருந்து காவிரியில் தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் முகமது அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரின் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காவிரியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். மேகதாது அணைக்கட்டும் முயற்சியை கைவிட வேண்டும். அனைத்து நீர்வரத்து வடிகால் வாரிகளையும் ஏரி குளங்களையும் உடனடியாக தூர்வார வேண்டும்.


கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள்


கர்நாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீர் வழங்க ஒன்றிய அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் கோவிந்தராஜ், தமிழக  நலிவடைந்த விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம் ஆகியோர் பேசினர்.


இதில் விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ் கோவிந்தராஜ்,எஸ். ஞானமாணிக்கம், கே.முனியாண்டி, கே.தமிழரசன், சி பாஸ்கர், கே.அபிமன்னன், எம் ராம், ஆர். உதயகுமார், கருப்பையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


காவிரி பாசனம் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது


ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முகமது அலி  கூறியதாவது: கடந்த ஆண்டை போலவே காவிரி பாசனம் என்பது மிகப் பெரிய அளவில் விவசாயிகளை ஏமாற்றி விட்டது. அதேபோல இந்த ஆண்டும் அதே சூழ்நிலைதான் நிலவுகிறது. ஏற்கனவே நடைமுறைப்படி ஜூன் 12 ந்தேதி மேட்டூர் அணை திறந்து இருக்க வேண்டும். மேட்டூரில் தண்ணீர் இல்லை, தண்ணீர் இல்லாமல் மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என்று சொல்லுவதற்கு நாங்களும் தயாராக இல்லை.


90 டிஎம்சிக்கு மேல் தர வேண்டிய தண்ணீர் பாக்கி உள்ளது


தண்ணீர் இல்லாமல் போனதுக்கு என்ன காரணம் என்பது குறித்து மத்திய  அரசும், மாநில அரசும் மாநில அரசு ஆராய வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து கர்நாடகத்திலிருந்து நமக்கு வரவேண்டிய தண்ணீர், ஏறத்தாழ 90 டி எம் சி க்கு மேல் பாக்கி இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நமக்கு கர்நாடக அரசு தண்ணீர் தராமல் தேக்கி வைத்துள்ளது. இதை கண்டித்து தான் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.  உடனடியாக மேலும் காலம் தாழ்த்தாது தமிழ்நாடு அரசு இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள  காங்கிரஸ் கட்சியின் அரசு தான் அங்கே இருக்கிறது. இப்படி பொருத்தமான சூழல் உள்ள போதும் தமிழக விவசாயிகள் இன்று வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்கதையாக இருக்கிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.