ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதுமையான பயணிகள் வசதி - ரயில் பெட்டியில் தங்கும் அறைகள்
ரயில் நிலையங்களில் அடிப்படை வசதி
இந்தியா முழுவதும் ரயில்நிலையங்கள் மேம்படுத்தப்படுகிறது. மதுரை ரயில்நிலையம் போல, பல இடங்களில் அதி நவீன வசதிகள் கொண்டு ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதே போல் விபத்துக்குளை குறைக்கும் வகையில் ரயில் பாதைகள் சீரமைக்கப்படுகிறது. இந்த சூழலில் ஏற்கனவே இருக்கும் ரயில் நிலையங்களில் பயணிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் விருதுநகர் ரயில் நிலையத்தில் குளிரூட்டப்பட்ட கட்டண பயணிகள் காத்திருப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதுமையான பயணிகள் வசதி கொண்டுவரப்பட உள்ளது. குறைந்த கட்டணத்தில் ரயில் பெட்டியில் சொகுசான தங்கும் அறைகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
வரையறுக்கப்பட்ட கட்டணத்தை வசூலித்துக் கொள்ள வேண்டும்
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரயில் போக்குவரத்திற்கு பயன்படாத ஐந்து ரயில் பெட்டிகள் வழங்கப்படும். ரயில் பெட்டிகளின் உட்புறத்தில் உரிய மாற்றங்கள் செய்து தங்கும் அறைகளாக்கும் பணி தேர்ந்தெடுக்கப்படும் ஒப்பந்ததாரரின் கடமையாகும். பின்பு அவற்றை பயணிகளின் பயன்பாட்டிற்கு அனுமதித்து வரையறுக்கப்பட்ட கட்டணத்தை வசூலித்துக் கொள்ள வேண்டும்.
இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்
இந்த 5 ஆண்டு கால ஒப்பந்த பணிக்கு ஒப்பந்ததாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இந்த மின்னணு ஒப்பந்தம் பற்றிய மேல் விவரங்களுக்கு www.ireps.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் அல்லது 9003862967 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மின்னணு ஒப்பந்தங்கள் ஜூலை 15 மதியம் 12 மணிக்குள் இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்” எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.