மருத்துவ காப்பீடு என்பது இன்றைய சூழலில் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு, உலக அளவில் மருந்துகள் மற்றும் மருத்துவ செலவுகள் பல மடங்கு அதிகரித்து வருகிறது. இது இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஒவ்வொருவரும் மருத்துவ காப்பீடு செய்து கொள்வது, மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement

முதல்வர் மருத்துவ காப்பீடு - CMCHIS

அனைவராலும் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்ள முடியாது. இதற்காக அரசு சார்பிலும் காப்பீட்டு திட்டங்கள், இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme - CMCHIS) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த காப்பீடு திட்ட மூலம் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையை அரசு உறுதி செய்கிறது. இந்த திட்டம் மூலம் தமிழ்நாட்டில் சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் பயன் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தின் கீழ் 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் (Diagnostic procedures) வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

காப்பீட்டுத் தொகை எவ்வளவு?

குடும்பம் ஒன்றுக்கு ஐந்து லட்ச ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

இந்திட்டத்தில் பயன்பெற வயது என்ன ?

தமிழக அரசின் இந்த திட்டத்தின் கீழ், பச்சிளம் குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் பயன்பெறலாம். வயது வரம்பு என்பது கிடையாது.

கட்டணம் இல்லாத சிகிச்சை

அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில், கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி? How to Register for CM Health Insurance

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பீடு திட்ட மையத்தை அணுக வேண்டும். அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், காப்பீட்டு திட்டத்திற்காக மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தேவையான ஆவணங்கள் என்னென்ன?

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, 6 மாதத்திற்குள் வழங்கப்பட்ட வருமான சான்றிதழ் கட்டாயமாக வேண்டும், குடும்பத் தலைவரின் சுய உறுதிமொழி கடிதம் ஆகியவை விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்களாக உள்ளன. அங்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து, சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் குடும்ப அட்டையில் உள்ள அனைவருக்கும் காப்பீடு செல்லுபடி ஆகும். குடும்ப அட்டையில் பெயர் வரவில்லை என்றாலும், பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த காப்பீடு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பித்த உடனே 22 இலக்கு எண் ஒன்று கொடுப்பார்கள், அதன் பிறகு காப்பீட்டு அட்டை வரும். அவசர தேவை ஏற்பட்டால், இந்த 22 இலக்கு எண்ணை வைத்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பித்த அடுத்த சில நாட்களில், காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டை வழங்கப்படும்.

சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள? 

இத்திட்டம் குறித்து விபரங்களை அறிந்து கொள்ள உதவி மையம் உள்ளது. கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.