தென்னிந்தியாவில் தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கை ஓங்கியுள்ள மாநிலமாக கர்நாடக உள்ளது. இந்த மாநிலத்தின் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே மாதம் 10-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.


பா.ஜ.க.வுடன் மோதும் அ.தி.மு.க.:


இதற்காக ஆளுங்கட்சியான பா.ஜ.க. மற்றும் ஏற்கனவே ஆட்சியில் இருந்த காங்கிரசும் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகாவில் தமிழர்கள் அதிளவில் வசித்து வருகின்றனர். குறிப்பாக கோலார் தங்கவயல், ராஜாஜிநகர், காந்திநகர், காமராஜப்பேட்டை, புலிகேசிநகர், சிவாஜிநகர் மற்றும் சி.வி.ராமன்நகர் ஆகிய தொகுதிகளில் அதிகளவில் உள்ளனர். இதனால், கர்நாடகாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். காலம் முதலே போட்டியிட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது. இதனால், கர்நாடக தேர்தலில் அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.க.விடம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை குறித்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், கர்நாடக தேர்தலில் பா.ஜ.க.வின் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட தொகுதியில் திடீர் திருப்பமாக அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதிருப்தியில் எடப்பாடியா?


கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வும், காங்கிரசும் செல்வாக்கான கட்சிகளாக இருந்தாலும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறும் கட்சியாக மட்டுமின்றி, வாக்குகளை பிரிக்கும் கட்சியாகவும் உள்ளது. கடந்த கால சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதே அதற்கு சான்றாகும்.


தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் கருத்துக்களை ஆளுங்கட்சியான தி.மு.க. விமர்சித்து வருவது மட்டுமின்றி, கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வும் கடுமையாக விமர்சித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதிர்ச்சியற்ற தலைவரின் கருத்துக்கு பதில் அளிக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பேட்டியில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கூட்டணி தொடருமா? முறியுமா?


இந்த சூழலில், பா.ஜ.க. வேட்பாளருக்கு போட்டியாக அ.தி.மு.க. வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி இறக்கியிருப்பது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு 3 தொகுதிகளில் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வேட்பாளரை களமிறக்கியுள்ளது. அந்த ஒரு வேட்பாளரும் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளருக்கு எதிராகவே களமிறக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 


அ.தி.மு.க. சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் களமிறங்கியுள்ள அன்பரசன் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. தலைவர்கள் பா.ஜ.க.வுடன்தான் கூட்டணியில் இருக்கிறோம் என்று கூறினாலும், அ.தி.மு.க. முக்கிய தலைவர்கள் சிலர் இந்த கூட்டணியை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால், பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி முறிந்துவிடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேசமயம் கர்நாடகாவில் மட்டும் பா.ஜ.க.வை எதிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடனான கூட்டணி தொடருமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கையின் அடுத்த கட்ட நகர்வு குறித்து நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர்.


மேலும் படிக்க: ”இன்று பில்கிஸ்; நாளை யாரா வேணா இருக்கலாம்; எந்த விதியை கடைபிடிச்சீங்க?” - மத்திய அரசை வறுத்தெடுத்த உச்ச நீதிமன்றம்..!


மேலும் படிக்க: TN Assembly: மீனவர்களுக்காக அதிமுகவுடன் கைகோர்த்த விசிக: பேரவையில் உறுதியளித்த அமைச்சர் மா.சு!