பில்கிஸ் பானு வழக்கு:


குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது. குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


கடந்த ஜனவரி 24ஆம் தேதி, இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நீதிபதிகள் வேறு வழக்கை விசாரித்ததால், பில்கிஸ் பானு மனு மீதான விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் சோபா குப்தா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.


இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரின் கோரிக்கையை ஏற்றது. அதன்படி, இந்த மனுக்களை கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகிய நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. கடைசியாக நடைபெற்ற விசாரணையின்போது, விதிகளுக்கு உட்பட்டு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசும் குஜராத அரசும் பரிசீலித்து வருவதாக மத்திய அரசின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். 


மத்திய அரசை வறுத்தெடுத்த உச்ச நீதிமன்றம்:


இந்த வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்றம், "கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை ரத்து செய்த விவகாரத்தில் மாநில அரசு சுதந்திரமாக யோசித்து முடிவை எடுத்திருக்கிறதா என்பதை ஆராய ஆவணங்களை ஆய்வு செய்வது முக்கியமாகிறது. 


இன்றைக்கு இந்த பெண்ணுக்கு நேர்ந்தது நாளைக்கு உங்களுக்கோ அல்லது எனக்கோ நடக்கலாம். தண்டனை ரத்து வழங்கப்பட்ட முடிவில் எந்த விதிகளை பின்பற்றினீர்கள்? அனைவருக்கும் ஒரே விதிதான் பொருந்தும். எனது சகோதரிக்கும் சகோதரனுக்கும் நடந்தது எனக்கு மிக பெரிய கவலையை தருகிறது" என தெரிவித்தது.


"நன்றாக யோசித்தே மாநில அரசு முடிவை எடுத்திருக்கிறது. ஆனால், தற்போது ஆவணங்களை வெளியிட விலக்கு கோருகிறது" என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ கூறினார்.


இதற்கு வாதத்திற்கு பதில் அளித்த நீதிபதி ஜோசப், "நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்பிப்பதில் இருந்து மாநில அரசுக்கு விலக்கு உள்ளது என்கிறீர்களா? தேசிய முக்கியத்துவம் கொண்ட வழக்குகளில் கூட ஆவணங்கள் எங்களிடம் காட்டப்பட்டுள்ளன. இது நீதிமன்ற அவமதிப்பு" என்றார்.


"இதில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து பரிசீலிக்க உள்ளேன். திங்கள்கிழமை, மறுசீராய்வு மனு தாக்கல் செய்வேன்" என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.


பின்னர், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.