பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கர்நாடக தேர்தல் இணை பொறுப்பாளராக பாஜக தேசிய தலைமை அறிவித்துள்ள நிலையில், அங்கு மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க அவர் கர்நாடகா சென்றுள்ளார். இந்நிலையில், அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டர், கார், அவர் தங்கியிருந்த அறைகளில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலை
கர்நாடாகவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலையை அம்மாநிலத்தின் தேர்தல் பணிகளை கவனிக்க இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது முதல் அடிக்கடி அம்மாநிலம் சென்று தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார். தேர்தல் நெருங்கும் நிலையில் கர்நாடகாவிலேயே முகாமிட்டு பணிகளை முடுக்கிவிட்டு வரும் அண்ணாமலை, தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரமும் செய்து வருகிறார்.
அண்ணாமலை ஹெலிகாப்டரில் மூட்டை மூட்டையாக பணம் ?
ஏற்கனவே கர்நாடகாவில் பணியாற்றிய அனுபவம் இருப்பதாலும் கன்னட மொழி தெரியும் என்பதாலும் அண்ணாமலையை பாஜக தலைமை தேர்தல் இணை பொறுப்பாளராக நியமித்துள்ள நிலையில், நேற்று முன் தினம் உடுப்பி மாவட்டம் காபுவிற்கு பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஹெலிகாப்டரில் அண்ணாமலை வந்தார். அப்போது, அவர் வந்த ஹெலிகாப்டர் முழுவதும் மூட்டை மூட்டையாக பணத்தை கட்டி எடுத்து வந்ததாகவும், அதனை மக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் உடுப்பி பகுதியில் பதுக்கி வைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் பகீர் குற்றச்சாட்டை எழுப்பினர். இது தொடர்பாக அவர்கள் தேர்தல் பறக்கும் படைக்கும் தகவல் அளித்தனர்.
பணத்தை தேடியவர்களுக்கு கிடைத்தது தண்ணீர் பாட்டில்
காபு பகுதிக்கு வந்த பறக்கும் படையினர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரை சோதனை இட்டனர். அதில் விதிகளுக்கு முரணாக எந்த பொருளும் கொண்டுவரப்படவில்லை. இதனால், மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த காங்கிரஸ் கட்சியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதோடு, அண்ணாமலை தங்கியிருந்த தி ஓஷன் பேர்ல் ஹோட்டலுக்கும் சென்ற பறக்கும் படையினர் அண்ணாமலையின் வாகனம், அவரது அறை என எல்லா இடங்களிலும் சோதனை நடத்தினர். ஆனால், எதுவுமே சிக்கவில்லை. சோதனையில் இரண்டு ஜோடி ஆடைகளும் ஒரு தண்ணீர் பாட்டில் மட்டுமே இருந்ததாக அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலை மூட்டை மூட்டையாக வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டுவருவதாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வினய்குமார் சொர்கே போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் இந்த கிடுக்குப்பிடி சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, தான் பணம் எடுத்து வந்ததாக காங்கிரஸ் கட்சியினர் பொய்யான செய்தியை கசியவிட்டுள்ளனர் என்றும் இதன் மூலம் அவர்களின் தோல்வி பயம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் மட்டுமே தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்தி வரும் நிலையில், ஒரு கட்சியின மாநிலத் தலைவராகவும் கர்நாடக பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராகவும் மட்டுமே உள்ள அண்ணாமலை, ஹெலிகாப்டரில் பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், காங்கிரஸ் கட்சியினர் பறக்கும் படைக்கு சந்தேகத்தின் பெயரில் இதுபோன்ற தகவலை அளித்ததாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் பறந்து வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு அண்ணாமலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற கேள்வியையும் காங்கிரஸ் கட்சியினர் எழுப்பியுள்ளனர்.
அதே நேரத்தில், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அண்ணமலையை கடுமையாக விமர்சித்துள்ளார். எங்களின் உத்தரவுகளை கேட்டு பணி செய்த அண்ணாமலை என்ற போலீஸ் அதிகாரி, பாஜகவில் சேர்ந்த பிறகு கட்சி கூட்டங்களில் அவருக்கு முன் வரிசையில் இடமும் முன்னாள் முதல்வர்களான எனககும் சதானந்தா கவுடாவும் பின் வரிசையில் இடமும் ஒதுக்கி அமர வைக்கப்பட்டோம். நாங்கள் முன்னாள் முதல்வர்கள் என்பதையே மறந்து பாஜக எங்களை அவமதித்து, அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுத்தது என்று விமர்சித்துள்ளார்.