TN Assembly : நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவை


தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிப்ரவரி 20ஆம் தேதி நிதிநிலைக்கான பட்ஜெட்டை நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாள் வேளாண் துறைக்கான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியானது. இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் பிப்ரவரி 24ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. 


அந்தவகையில், இன்றைய சட்டப்பேரவையில் நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் விசிக, கம்யூனிஸ்ட், அதிமுக கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.  அப்போது, மீனவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.


அமைச்சர் பதில்


இதனை அடுத்து, கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்றும் தெரிவித்திருக்கிறார்.


மெரினா கடற்கரையில் கடைகள் அகற்றம் தொடர்பாக நேற்று கூட மாநகராட்சி அலுவலகத்தில் மீனவ பிரதிநிதிகளுடன் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும், மீனவர்களுக்கு பாதிப்பும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு நாளாக இருந்த போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது.  இந்த பிரச்சனையில் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்ததன் அடிப்படையில் எடுக்கப்பட்ட சிறிய அளவிலான நடவடிக்கை இது என்று தெரிவித்தார்.


முதலமைச்சரால் மீன் கடை பிரச்சனைக்கு நல்ல முடிவு காணப்பட்டுள்ளது. ஆகவே இந்த பிரச்னைக்கு இன்றோடு முடிந்துவிட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  இதற்கிடையில்,  மெரினா லூப் சாலையில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுத்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மேலும்,  சாலையின் மேற்கு பகுதியில் உள்ள நடைபாதையில் தற்காலிகமாக மீன்கடைகள் அமைக்கப்படுவதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஒழுங்குபடுத்தப்படும் என்றும்  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மீன் சந்தை கட்டுமான பணிகளை முடிக்கும் வரை சாலையின் மேற்கு பக்கத்தில் மீன் கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.