அமமுக அமைப்புச் செயலாளராக சிவசண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமமுக அமைப்புச் செயலாளராக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் கே. சிவசண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக உடல்நிலையை கருத்தில்கொண்டு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சிவசண்முகம் விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் அமைப்பு செயலாளர்
அமமுகவின் முன்னாள் அமைப்புச் செயலாளர் பொன்.த.மனோகரன் முன்னதாக கடந்த ஜூன் மாதம் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக் கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தொடர்ந்து இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் அமமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்திலிருந்தும் பொன்.த.மனோகரன் நீக்கிவைக்கப்படுகிறார் எனவும், கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் முன்னதாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
டிடிவி தினகரன் உடல்நலக்குறைவு
கடந்த வாரம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென உடல்நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரவில் அவர் சாப்பிட்ட உணவு சேரவில்லை என்பதால் காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அ.ம.மு.க. தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் வேதனை அடைந்து மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர்
அதனைத் தொடர்ந்து, தனது உடல்நிலை குறித்து தினகரன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் உணவு ஒவ்வாமை காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.