தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அவரது சொந்தமாவட்டமான கரூரிலேயே அவருக்கு எதிரான போஸ்டர்களை பாரதிய ஜனதா கட்சியினர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



செந்தில்பாலாஜிக்கு எதிராக பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்


கரூர் மாவட்டத்தின் பிரதான பகுதிகளில் ’திருடர் குல திலகமே ; ஊழலின் மறு உருவமே’ என்ற வாசகம் பொறுந்திய போஸ்டர்களை பாஜகவினர் ஒட்டியுள்ளனர். அதோடு, தராசில் ஒரு பக்கம் செந்தில்பாலாஜியும் மறுபக்கம் பணமும் இருப்பதுபோல அந்த போஸ்டர்களில் புகைப்படம் அச்சிடப்பட்டிருக்கிறது.


எண்ணூர் அனல் மின் நிலைய திட்டத்திற்காக நஷ்டத்தில் இயக்கும் பிஜிஆர் நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளதால், அதன் மூலம் செந்தில்பாலாஜி பல கோடிகளை லஞ்சமாக பெற்றுள்ளதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது கரூர் மாவட்ட பாஜகவினர் இதுபோன்ற போஸ்டர்களை மாவட்டம் முழுவதும் ஒட்டியிருக்கின்றனர்.


அணிலுக்கு அடித்த ஜாக்பாட் 5 ஆயிரம் கோடி என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை பாஜகவினர் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்தும் வருகின்றனர். இது தொடர்பாக தகவல் கிடைத்ததும், பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை காவல்துறையினர் கிழித்து தள்ளினர்.






கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் விபி, துரைசாமி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் புகார் மனு அளித்திருந்தனர்.



ஆளுநரிடம் மனு அளித்த பாஜகவினர்


இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் அதிருப்பதி அடைந்துள்ளனர். ஏற்கனவே, செந்தில்பாலாஜிக்கு திமுக தலைமை கொடுத்து வரும் முக்கியத்துவத்தால், சீனியர் அமைச்சர்களே அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், செந்தில்பாலாஜிக்கு எதிராக பாஜக தீவிரமாக களமாட தொடங்கியிருப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும், பண மோசடி வழக்கு விசாரிக்கப்பட்டால் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவிக்கே ஆபத்து வரலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.



முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செந்தில்பாலாஜி


 


ஒருபுறம் சட்ட சிக்கலையும் மறுபுறம் அரசியல் ரீதியான சிக்கலையும் செந்தில்பாலாஜிக்கு ஏற்படுத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிகிறது. அதனுடைய ஒரு பகுதியாகதான் செந்தில்பாலாஜிக்கு எதிராக போஸ்டர்கள் முளைத்துள்ளதாக கூறப்படுகிறது.