காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார நிலை மற்றும் கொள்கைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார்.
பாஜக வெள்ளை அறிக்கை:
அதில் தெரிவித்துள்ளதாவது, 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்றபோது நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக இருந்தது. பணவீக்கம் அதிகமாக இருந்தது. முதலீடுகள் குறைவாக இருந்தது. மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் குறைந்த அளவில்தான் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்தது. மேலும் 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் காமன்வெல்த் ஊழல் இருந்தன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏராளமான மோசடிகள் நடந்தது, அதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு நிதி பற்றாக்குறைக்கு வழி வகுத்தது. வங்கி நெருக்கடி UPA அரசாங்கத்தின் மிக முக்கியமான ஒன்றாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "2014க்கு முந்தைய காலகட்டத்தில் ஒவ்வொரு சவாலும் NDA அரசின் பொருளாதார மேலாண்மை மற்றும் நிர்வாகத்தின் மூலம் சமாளிக்கப்பட்டது. மோடி அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகம் இந்தியாவை நிலையான வளர்ச்சியின் பாதையில் வைத்துள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோடி அரசாங்கம்தான் இந்தியாவை நிலையான வளர்ச்சி பாதையில் கொண்டு வந்தது எனவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கருப்பு அறிக்கை:
இன்று மாலை மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், இன்று காலை, காங்கிரஸ் தரப்பிலிருந்து பாஜகவின் 10 ஆண்டுகள் ஆட்சி குறித்து காங்கிரஸ் கருப்பு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. காங்கிரஸ் அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது, பிரதமர் மோடி 10 ஆண்டுகால ஆட்சியில் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது, விலைவாசி உயர்ந்திருக்கிறது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒரே நாளில், இன்று இரு அரசியல் கட்சிகளும், அறிக்கை வெளியிட்டிருப்பது அரசியல் சூட்டைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிக்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்: Voter List: நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை கோடி பேர்?
இதையும் படிக்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்: "பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் அல்ல.. மக்கள ஏமாத்துறாரு" பரபரப்பை கிளப்பும் ராகுல் காந்தி!