வரும் நாடாளுமன்ற தேர்தலில் 96 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அரசியல் கட்சிகள் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜக தரப்பில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல் பிரச்சார பாடல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதேபோல் இந்திய கூட்டணி தரப்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இது ஒரு பக்கம் இருக்க தேர்தல் ஆணையம் தரப்பில் வாக்காளர் பட்டியல், தேர்தல் பணிகள் தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்றது. அதன்படி நாடு முழுவதும் 96 கோடிக்கு மேற்பட்டோர் வாக்களிக்க தகுதியானர்வர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்த வாக்காளர்களில் 47 கோடி பேர் பெண்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் 1.73 கோட்டிக்கு மேற்பட்டோர் 18 முதல் 19 வயது பிரிவை சேர்ந்தவர்கள் அதாவது முதல் முறை வாக்காளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 18 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 91.20 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ‘சிறப்பு சுருக்கமுறை திருத்தம்’ எனப்படும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.  அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்டது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 


தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை  6,18,9,0348 ஆகும். அதில் ஆண்கள் - 3,03,96,330, பெண்கள் - 3,14,85,724, மூன்றாம் பாலினம் - 8,294 பேர் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில்  6,60,419 பேரும், கேவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில் 4,62,612 பேரும் அடங்குவர். குறைந்தபட்ச வாக்காளர்கள் நாகை மாவட்டம் கீழ்வேளூர் - 1,72,140 உள்ளனர். அதனை தொடர்ந்து சென்னை துறைமுகம் 1,72,624 ஆகும். வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாடு வாக்காளர்களின் எண்ணிக்கை 3480 பேர் ஆகும். மாற்றுத்திறனாளிகள் 4,32,805 பேர் உள்ளனர். இதனை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. 


இந்தியாவில் 1951 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17.32 கோடியாக இருந்தது. 1957 ஆம் ஆண்டு இது 19.37 கோடியாக உயர்ந்தது. நாடு  முழுவதும் மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களில் 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் பணிகளில் சுமார் 1.5 கோடிக்கு மேற்பட்ட மக்கள் ஈடுபடுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.